82 தீ நட்பு
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
82 தீ நட்பு
குறள் 811:
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
பரபரப் பான உறவெல்லாம் பொய்யே!
வளர்வதினும் தேய்தலே நன்று.
குறள் 812:
உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.
தேவையா? ஒட்டுவார்! இல்லையா? வெட்டுவார்!
தேவையில்லை இத்தகைய நட்பு.
குறள் 813:
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
கள்வர், விலைமாது, பயன்பார்க்கும் தன்னல
நண்பர்கள் மூவரும் ஒன்று.
குறள் 814:
அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
போரில் கவிழ்க்கும் குதிரையன்ன நண்பரோ
தீது! தனிமையே நன்று.
குறள் 815:
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
நல்லது செய்தாலும் பாதுகாக்கும் உள்ளமற்ற
நட்பை விலக்குதல் நன்று.
குறள் 816:
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.
பேதையின் நட்பைக் காட்டிலும் பண்பான
சான்றோர் பகைமனம் மேல்.
குறள் 817:
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
சிரித்துக் கெடுக்கின்ற நட்பிங்கே இன்பம்
அளிப்பதைக் காட்டிலும் வன்பகையின் கோடிகோடித் துன்பமே எவ்வளவோ மேல்.
குறள் 818:
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
நம்மால் முடிவதைக் கூட முடியாமல்
செய்துவிடும் நட்பைத் தவிர்.
குறள் 819:
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
சொல்லும் செயலும் முரண்படும் நண்பரால்
தொல்லை கனவிலும் தான்.
குறள் 820:
எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு.
வீட்டில் புகழ்ந்துரைத்து நாட்டில் பலர்முன்னே
தூற்றுவோர் நட்பை விலக்கு.
0 Comments:
Post a Comment
<< Home