Tuesday, January 12, 2021

80 நட்பாராய்தல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

80 நட்பாராய்தல்

குறள் 791:

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு.


ஆராய்ந்து பார்க்காமல் நட்பினை ஏற்பதுபோல்

கேடுகள் வேறில்லை சாற்று.

குறள் 792:

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.


ஆராய்ந் தறியாத  நட்பிலே வேரோடும்

சாவுக் கிணையான கேடு.

குறள் 793:

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா

இனனும் அறிந்தியாக்க நட்பு.


பண்பு, குடும்பத்தின் பின்னணி, குற்றங்கள்,

சுற்றமறிந்து நட்பினைக் கொள்.

குறள் 794:

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.


பழிக்கஞ்சி  தீயசெயல்  செய்யாதோர் நட்பை

விலைகொடுத் தேனும் வளர்.

குறள் 795:

அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய

வல்லார்நட் பாய்ந்து கொளல்.


தவறெனின் கண்டித் தழவைப்போர் நட்பை

உயர்வென எண்ணியேற்றுக் கொள்.

குறள் 796:

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்.


கேட்டிலும் நன்மையுண்டு! நண்பரின் மெய்த்தோற்றம்

காட்டும் அளவுகோ லஃது.

குறள் 797:

ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்

கேண்மை ஒரீஇ விடல்.


கீழ்மக்கள் நட்பைத் தவிர்ப்பதே நல்லது!

வாழ்க்கையின் நற்பயனாம் சாற்று.

குறள் 798:

உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க

அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.


ஊக்கம் சிதைக்கும் செயல்வேண்டாம்! துன்பத்தில்

போக்குகாட்டும் நட்பை விலக்கு.

குறள் 799:

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளஞ் சுடும்.


துன்பத்தில் கைவிட்டுச் சென்றவரைச் சாம்போதும்

எண்ணினால் உள்ளம் சுடும்.

குறள் 800:


மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும

ஒருவுக ஒப்பிலார் நட்பு.


மாசற்றோர் நட்பை வளர்க்கவேண்டும்! மாசுள்ள

நீசரின் நட்பை விலக்கு.


மதுரை பாபாராஜ்




























0 Comments:

Post a Comment

<< Home