Friday, January 15, 2021

85 புல்லறிவாண்மை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

85 புல்லறிவாண்மை

குறள் 841:

அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை

இன்மையா வையா துலகு.


இல்லாமை என்றால் அறிவில்லா தன்மைதான்!

இல்லாமை அல்ல பிற.

குறள் 842:

அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்

இல்லை பெறுவான் தவம்.


பொருளை அறிவிலார் தந்து மகிழ்ந்தால்

பொருள்பெற்றோர் பெற்ற பேறு.

குறள் 843:

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை

செறுவார்க்கும் செய்தல் அரிது.


அறிவிலி ஏற்படுத்திக் கொள்கின்ற துன்பம்

செறுபகையும் ஏற்படுத் தாது.

குறள் 844:

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை

உடையம்யாம் என்னும் செருக்கு.


தன்னையே தானே அறிவுடையோன் என்றெண்ணும்

தன்மை அறியாமை யாம்.

குறள் 845:

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற

வல்லதூஉம் ஐயம் தரும்.


கல்லாத ஒன்றையும் கற்றது போல்நடித்தால்

கற்றதையும் நம்பா துலகு.

குறள் 846:

அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்

குற்றம் மறையா வழி.


தன்குற்றம் நீக்காமல் மேனியை ஆடையால்

இங்கே மறைத்தல் இழிவு.

குறள் 847:

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

பெருமிறை தானே தனக்கு.


அறவுரையை ஏற்காத புல்லறி வாளன்

இடரில் துடிப்பான் வலிந்து.

குறள் 848:

ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவுமோர் நோய்.


சொன்னாலும் கேட்கமாட்டான்! தன்னாலும் செய்யமாட்டான்!

என்றுமிந்தத் தன்மையே நோய்.

குறள் 849:

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு.


தானறிந்த ஒன்றே சரியென்போர் மற்றவர்கள்

தாமறிந்த ஒன்றினைச் சொன்னாலும் ஏற்கமாட்டார்!

வீணாகும் அம்முயற்சி தான்.

குறள் 850:

உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்

தலகையா வைக்கப் படும்.


இவ்வுலகம் உண்டென்று சொல்வதை இல்லையென்பார்

புல்லறி வாளராவார்! சாற்று.






































0 Comments:

Post a Comment

<< Home