86 இகல்
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
86 இகல்
குறள் 851:
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.
இணக்கம் சுணக்கமானால் ஏற்படும் நோயே
மனவேறு பாடாகும் செப்பு.
குறள் 852:
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.
வெறுப்புடன் தீங்குசெய்த போதிலும்
துன்பம்
துரும்பளவும் செய்யாமை பண்பு.
குறள் 853:
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.
வேறுபாடு நோய்தன்னை நீக்கிவிட்டால்
நீடுபுகழ்
வாழ்க்கையில் எப்படியும் உண்டு.
குறள் 854:
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
வேறுபாடே துன்பந்தான்! அத்துன்பத்தை நீக்கினால்
ஈடற்ற இன்பமே வாழ்வு.
குறள் 855:
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்.
உள்ளத்தில் வேறுபாடு தோன்றினால் நீக்குவோரை
வெல்ல முடிந்தவர் யார்?
குறள் 856:
இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.
மாறுபாடு நல்லதென்றே எண்ணுவோர் வாழ்க்கையோ
கேடுசூழக் கெட்டுவிடும் சொல்.
குறள் 857:
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.
மாறுபாட்டை ஏற்கும் அறிவிலிகள் மெய்ப்பொருள்
மேன்மையை ஏற்கமாட்டார் இங்கு.
குறள் 858:
இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாங் கேடு.
மனத்திலே மாறுபாட்டை நீக்கினால் ஆக்கம்!
மனத்தில் வளர்த்தாலோ கேடு.
குறள் 859:
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.
நன்மைகள் வாழ்க்கையில் வரும்போது
மாறுபாட்டை
எண்ணமாட்டார்! கேடுகள் சூழும் பொழுதிலே
எண்ணுவார் வேறுபாட்டைத் தான்.
குறள் 860:
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.
மாறுபாடு துன்பம் அளிக்கும்! இணக்கமான
சூழல் பெருமகிழ்ச்சி் தான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home