Thursday, March 26, 2026

வினைத்தூய்மை--66

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

வினைத்தூய்மை--66

---------------------------------------------------------------

செயல்களின் தூய்மை வாழ்க்கையின் நேர்மை!

---------------------------------------------------------------

வாழ்க்கையின் வளமே துணைத்தூய்மை!

நலத்தைச் சேர்க்கும் செயல்தூய்மை!


புகழை அறத்தைச் சேர்க்காத

செயல்கள் தம்மைச் செய்யாதே!


சிகரம் செல்ல முயல்பவர்கள்

இழிந்த செயலைத் தவிர்த்திடுவார்!


அறிவில் தெளிவைக் கொண்டவர்கள்

துன்பம் வந்தே துளைத்தாலும்

பழிக்கும் செயலைச் செய்வதில்லை!


வருந்தும் செயலைத் தவறாக

செய்த போதிலும் மீண்டுமதைச்

செய்யா திருப்பதே அறிவாகும்!


தாயோ பசியால் துடித்தாலும்

அதனைப் போக்கச் சான்றோர்கள்

பழிக்கும் செயலைச் செய்வதில்லை!


பழிகள் விதைக்கும் தொழில்செய்தே

வளமாய் வாழ்வது தாழ்வாகும்!


வறுமை புரட்டி எடுத்தாலும்

நேர்மையாய் வாழ்தல் உயர்வாகும்!


பிறரின் கதறலில் பெற்றசெல்வம்

நம்மை ஒருநாள் கதறவைக்கும்!


நல்வழிச் செல்வம் விலகினாலும்

நமக்கோ என்றும் நன்மைதரும்!


தீயவழிச் செல்வத்தைக் காப்பதுவும்

பச்சைமண் பானையில் நீரூற்றி

சேமிக்க முயல்வதும் ஒன்றாகும்!


0 Comments:

Post a Comment

<< Home