Wednesday, March 25, 2026

வெருவந்த செய்யாமை---57

 திருக்குறள் மழலைப் பாடல்

------------------------------------------------------

வெருவந்த செய்யாமை---57

---------------------------------------------------------

குற்றத்தைச் செய்வதற்குக் கொடுக்கின்ற தண்டனையால்

மீண்டுமந்தக் குற்றத்தைத் தடுப்பதுதான் நல்லரசு!


கடுமையாகக்  கண்டிப்ப தைப்போலக் கண்டித்து

மென்மையாய்த் தண்டிக்கும் நல்லரசே நீடிக்கும்!


பொதுமக்கள் அச்சத்தில் வருந்துமாறு நடக்கின்ற

கொடுமையான அரசிங்கே விரைவினிலே அழிந்துவிடும்!


கொடுமையான அரசிதுதான் என்றேதான் பொதுமக்கள்

மனம்நொந்தால் எக்கணமும் அவ்வரசு வீழ்ந்துவிடும்!


சந்திக்க வருகின்ற மக்களையோ இழுத்தடிக்கும்

கொடுங்கோலன் செல்வங்கள் பேய்காத்த செல்வந்தான்!


கடுஞ்சொற்கள் கருணையற்ற பார்வையும் கொண்டவனின்

செல்வங்கள் வளராமல் விரைந்தேதான் அழிந்துவிடும்!


அனல்சொற்கள், வரம்புகளை மீறிய தண்டனைகள்

இவையெல்லாம் அரசாங்கம் வலுவிழக்க அரமாகும்!


அமைச்சரைக் கலக்காமல் தன்னலமாய் முடிவெடுக்கும்

அரசெல்லாம் செல்வத்தை இழந்தேதான் தவித்திருக்கும்!


வருமுன்னே காக்காமல் பகைதிரண்டு வந்தபின்பு

அச்சத்தில் நடுங்குபவன் அஞ்சியஞ்சி அழிந்திடுவான்!


கற்காத அறிவற்றோர் துணையாக உள்ளவனோ

பூமிக்குச் சுமையாவான்! அச்சுமைபோல் வேறில்லை!


மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home