வாழ்வியல் அந்தாதி 46-50
46 .காட்டுக்குள் சென்று தவமிருந்து ஞானத்தைத்
தேக்கிவைக்க வீட்டுக் கடமை மறந்துவிட்டு
நாட்டமுடன் செல்வது குற்றந்தான்! நம்பியுள்ள
வீட்டாரைக் காத்தல் தவம்.
47. தவமாய் நினைத்துக் கடமையைச் செய்தால்
கவனம் சிதறாமல் செய்து முடிப்போம்!
தவத்தைத் துறவறம் என்றே நினைக்கும்
தவறை மனிதனே நீக்கு.
48.நீக்கவேண்டும் வாழ்வைச் சிதைக்கும் குடிவெறியை!
தேக்கவேண்டும் இல்லறத்தைக் காக்கும் குறள்நெறியை!
நீக்குவதைத் தேக்கிவைத்துத் தேக்குவதை நீக்கிவிட்டால்
தூற்றும் சமுதாயம் சூழ்ந்து.
49.சூழ்ந்திருக்கும் நண்பர்கள் நல்லவரா? கெட்டவரா?
காய்தல் உவத்தலின்றித் தன்னல எண்ணமின்றி
நாளும் கபடமின்றி உள்ளவரா? என்றேதான்
பார்த்துப் பழகுவதே நட்பு.
50.நட்பற்ற வாழ்க்கை நரம்பற்ற வீணைதான்!
நட்பின் அரவணைப்பில் உள்ளம் நெகிழ்ந்திருக்கும்!
நட்பின் முரண்பாட்டில் நெஞ்சம் தகித்திருக்கும்!
நட்புதான் வாழ்வின் உயிர்.
0 Comments:
Post a Comment
<< Home