Friday, March 27, 2026

வாழ்வியல் அந்தாதி 1-5

 1.அன்பில் களங்கமில்லை என்றால் அத்தகைய

 அன்போ எலும்பை உருக்கிவிடும் என்பதே

 உண்மையான அன்பிற்குத் தன்மையென்றார் ஞானிகள்! 

 அன்பின் வலிமையைப் பார்.

------------------------------------------------------------

2. பார்ப்பதும் கேட்பதும் மெய்யில்லை! கண்மணியே!

  தீர விசாரிப்பதே மெய்யாம்! எனச்சொன்னார்!

  பார்ப்பதைக் கேட்பதை வைத்து முடிவெடுத்தால்

  வேரூன்றும் உட்பகைதான் சொல்.

---------------------------------------------------------------------------------------------------------

3. சொல்வதைச் செய்வதும் செய்வதைச் சொல்வதும்

  நல்லவர்கள் பின்பற்றும் நல்லொழுக்கம்--- சொல்லொன்றும்

  செய்யும் செயலொன்றும் என்றேதான் வாழ்பவர்கள்

  பொல்லாதோர் பின்பற்றும் தீது.

------------------------------------------------------------------------------------------------------------------

4. தீதுக்குத் தூதுவிட்டு வாழாதே! தீயோரின்

 சூதுக்குத் தோள்கொடுத்துச் சுற்றாதே! வன்சொல்லைக்

 காது கொடுத்துக் கேட்காதே! வஞ்சகரைக் 

 காததூரம் தள்ளிவைத்தால் நன்று.

--------------------------------------------------------------------------------------------------------------------------

5.நன்றாய்ப் பழுத்த பழமரத்தை நாடித்தான்

 வண்ணப் பறவைகள் நாடிவரும்-- சிந்தனை

 ஊற்றெடுக்கும் ஞானம் செறிந்தவரைத் தேடிவந்து

 போற்றுவார் நன்மக்கள் இங்கு.

-----------------------------------------------------------------------------------------


0 Comments:

Post a Comment

<< Home