Friday, March 27, 2026

இரவு -- 106

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

     இரவு -- 106

----------------------------------------------------------------

பிறரிடம் கேட்டுப் பெறும் நிலை!

----------------------------------------------------------------

கொடுப்போ ரிடத்தில் கேட்கலாம்!

கேட்டு மறுத்தால் பழியவர்க்கே!


தருவோர் இனிமையாய்த் தந்துவிட்டால்

பிச்சை எடுப்பதும் இன்பந்தான்!


ஏழைக் குதவும் பெருந்தகையை

நாடி இரத்தலும் அழகாகும்!


கனவிலும் உள்ளதை மறைக்காமல்

உதவும் நல்லோ ரிடம்தேடி

கேட்பதும் ஈகை போலாகும்!


இல்லை என்று மறைக்காமல்

கொடுப்போர் உலகில் இருப்பதால்தான்

குறிப்பால் இரத்தல் தொடர்கிறது!


மறைக்கும் செயலைச் செய்யாதோர்

கண்டால் இரப்போர் துன்பமென்னும்

வறுமைத் துயரம் நீங்கிவிடும்!


இரப்பவ ரைத்தான் இகழாமல்

உதவும் மனிதரைக் கண்டுவிட்டால்

இரப்போர் உள்ளம் மகிழ்ந்திருக்கும்!


இரப்பவர் மட்டும் இல்லையென்றால்

மக்கள் நடத்தும் வாழ்க்கையோ

கயிற்றால் இயக்கும் மரப்பொம்மை

நடக்கும் காட்சி போலாகும்!

இரந்து வாழ்வோர் இல்லையெனில்

கொடுப்போர் புகழுக் கிடமேது?

இரப்போர் சினத்தைத் தவிர்க்கவேண்டும்!

வறுமையே சினத்தின் அறிகுறியாம்!


0 Comments:

Post a Comment

<< Home