Thursday, March 26, 2026

பெருமை -98

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

     பெருமை 98

----------------------------------------------------------

பெருமை என்றும் உயர்வளிக்கும்!

சிறுமை என்றும் தாழ்வளிக்கும்!

----------------------------------------------------------------

முடியாச் செயலை ஊக்கத்தால்

முடிக்கும் திறமை பெருமையாம்!

அதனை முடிக்க முடியாமல்

தவிர்த்து வாழ்தல் சிறுமையாம்!


பிறப்பால் உயர்வு தாழ்வில்லை!

செய்யும் தொழில்கள், ஆற்றலுமே

உயர்வு தாழ்வின் அளவுகளாம்!


உயர்ந்த பதவியில் பண்பற்றோர்

இருந்தால் அவரோ தாழ்ந்தவராம்!

சிறிய பதவியில் பண்புள்ளோர்

இருந்தால் அவரே உயர்ந்தவராம்!


கற்பைப் போற்றும் காரிகைபோல்

ஒழுக்க நெறியில் வாழ்பவரின்

பெருமை ஒன்றே நிலையாகும்!


அனுபவம் மிக்கப் பெரியோரைப்

போற்றும் உயர்ந்த எண்ணங்கள்

இழிந்தோ ரிடத்தில் இருக்காது!


வகைதொகை இல்லா மனிதரிடம்

செல்வம், சிறப்பு குவிந்திருந்தால்

ஆணவம் கொண்டே துள்ளிடுவார்!


பெரியோ ரிடத்தில் பணிவிருக்கும்!

சிறியோர் என்றால் தற்பெருமைக் 

கொம்பின் நுனியில் நின்றிருப்பார்!


கர்வம் தவிர்த்தல் பெருமைதான்!

செருக்கிற் கடிமை சிறுமைதான்!


பிறரது தவறைக் குதறாமல்

வாழ்வதே என்றும் நற்பண்பாம்!


எதிலும் குற்றம் காண்பதுவோ

சிறுமைத் தனந்தான் வேறில்லை!


0 Comments:

Post a Comment

<< Home