Thursday, March 26, 2026

உட்பகை -- 89

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

     உட்பகை -- 89

---------------------------------------------------------------

உறவுகளைத் துண்டாடும் உட்பகையத் தூக்கி எறி!

----------------------------------------------------------------

நிழலும் நீரும் நோய்தந்தால்

இனிமை யல்ல இன்னல்தான்!


இனிக்கப் பேசும் உறவுகளும்

உட்பகை கொண்டால் துன்பந்தான்!


வாளைப் போன்ற நேர்ப்பகைக்கோ

அஞ்ச வேண்டாம்! வேர்போல

ஊன்றிப் பழகி உட்பகையை

அவிழ்க்கும் பகைவருக் கஞ்சவேண்டும்!


உட்பகை அறிந்து காத்துக்கொள்!

இல்லையேல் இங்கே மட்கலத்தை

அறுக்கும் கூர்மைக் கருவியைப்போல்

அதுவே அழித்து ஒழித்துவிடும்!


மனமே மாறா உட்பகைவர்

உறவைப் பிரிக்கும் குற்றத்தை

உவகை யுடனே செய்திடுவார்!


உறவுக் குள்ளே உட்பகையா ?

இறக்கும் வரைக்கும் துன்பந்தான்!


உடனி ருக்கும் மாந்தரிடம்

உட்பகை இருந்தால் பேரழிவின்

பிடியில் இருந்தே காப்பதுவோ

கானல் நீர்தான் என்றுணர்வாய்!


செப்பும் மூடியும் ஒன்றாக

இருப்பது போலத் தோன்றுகின்ற

தோற்றம் கொண்ட உட்பகைவர்

ஒட்டா மல்தான் பிரிந்திருப்பார்!


அரத்தால் தேய்க்க இரும்பழியும்!

உட்பகை வளர குலமழியும்!


எள்முனை அளவே உட்பகையோ

சிறிய தாக இருந்தாலும்

பெரிய தீங்கை விளைவிக்கும்!

மனத்தால் ஒன்றாமல் வாழ்வதுவும்

குடிசையில் பாம்புடன் ஒன்றாக

சேர்ந்தே இருப்பதும் ஒன்றாகும்!


0 Comments:

Post a Comment

<< Home