பழைமை---81
பழைமை---81
-----------------------------------------------------------
உண்மை நட்பின் உரிமைக்கு
எல்லைக் கோடுகள் இல்லையே!
--------------+-----------------------------------------------
உண்மை நண்பர் பிழைதன்னைப்
பொறுத்துப் போதல் பழைமையாம்!
நண்பர் உரிமை எடுத்தேதான்
செய்யும் செயலை ஏற்பதுதான்
சான்றோர் போற்றும் கடமையாம்!
ஏற்க வில்லை என்றாலோ
நட்பைப் போற்றிப் பயனில்லை!
நம்மை இங்கே கேட்காமல்
உரிமை கொண்டு செய்துவிட்டால்
தாமே செய்த தைப்போல
ஏற்பார் என்றும் அறிஞர்கள்!
நம்மை வருத்தும் செயல்தன்னை
நண்பர் செய்தால், அறியாமை
உரிமை என்றே கருதித்தான்
ஏற்க வேண்டும் பொன்மனத்தால்!
நட்பின் உரிமை அறிந்தவர்கள்
அழிவே நேரும் என்றாலும்
தொடர்பைத் துறக்க எண்ணமாட்டார்!
நெடுநாள் நண்பர் கேடுகளைத்
தனக்குச் செய்யும் நேரத்தில்
பொறுத்தே நட்பைத் தொடர்ந்திருப்பார்!
நண்பர் செய்யும் தவறுகளை
மற்றவர் இங்கே சொன்னாலும்
கேளா உரிமை கொண்டவர்க்குத்
தவறைச் செய்தநாள் பயனுடைத்தாம்!
நெடுநாள் நண்பர் தவறிழைத்தால்
நட்பைத் தொடரும் பெருந்தகையைப்
பகைவரும் இங்கே விரும்பிடுவார்!

0 Comments:
Post a Comment
<< Home