Thursday, March 26, 2026

பொருள் செயல்வகை---76

 திருக்குறள் குழந்தைப் பாடல்

---------------------------------------------------------

பொருள் செயல்வகை---76

---------------------------------------------------------

அறவழியில் வந்த பொருளுக்கு

          நிகரில்லை!

-----------------------------------------------------------

மதிக்கத் தகாத மனிதரையும்

மதிக்கச் செய்வது பொருளாகும்!


பொருளி ருந்தால் போற்றிடுவார்!

பொருளே  இல்லையா? தூற்றிடுவார்!


பொருளே அணையா விளக்காகும்!

பகைமை இருளைப் போக்கிவிடும்!


நேர்வழி ஈட்டிய செல்வங்கள்

இன்பம், அறத்தை வழங்கிடுமே!


அருளின் அன்பின் வழியின்றி

திரண்டே செல்வம் வந்தாலும்

துரும்பென எண்ணி விலக்குங்கள்!


சுங்கப் பொருளும் வரிப்பொருளும்

பகைவரை வென்று வந்தவையும்

அரசுக் குரிய பொருளாகும்!


அன்புத் தாயின் அருள்குழந்தை

செல்வம் என்னும் செவிலித்தாய்

அணைத்து மகிழ வளர்ந்திடுமே!


தனது செல்வத்தை வைத்தேதான்

செயலைச் செய்ய முற்படுதல்

யானைப் போரை மலைமீது

நின்றே பார்ப்பது போலாகும்!


பகைவர் செருக்கை அழிப்பதற்கு

உரிய கருவி பொருள்வளந்தான்!


அந்தப் பொருளைச் சேர்த்துவைத்தால்

எந்தப் பகையும் நடுங்கிடுமே!


நல்ல வழியில் பொருள்சேர்த்தால்

அறமும் இன்பமும் துணையாகும்!


0 Comments:

Post a Comment

<< Home