Thursday, March 26, 2026

அரண்--75

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

    அரண்--75

----------------------------------------------------------------

நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும்  இமையாகும்!

---------------------------------------------------------------

போருக்கு அஞ்சா வீரனுக்கும்

அஞ்சி நடுங்கும் கோழைக்கும்

காக்கும் துணையே அரணாகும்!


மலையும் நிலமும் அகழிகளும்

காடும் இயற்கை அரண்கள்தான்!


உயரம் அகலம் உறுதியுடன்

அழிக்க முடியா தன்மையுடன்

நிற்கும் அரணே அரணாகும்!


காவல் வாயில் சிறிதாயும்

சுற்றுப் புறமோ பெரிதாயும்

பகைவர் கண்டால் மலைப்பதாயும்

உடைய அமைப்பே அரணாகும்!


பகைவர் முற்றுகை இட்டாலும்

வெற்றி கொள்ள முடியாமல்

பலவகை உணவைக் கொண்டதாக

உள்ளதே நாட்டின் அரணாகும்!


உள்ளே இருப்போர்க்கு பொருள்வசதி

பகைவரை வெல்லும் வீரர்கள்

பெற்றுத் திகழ்வதே அரணாகும்!


சூழ்ந்து நின்றே தாக்கினாலும்

சிலரை துரோகியாய் மாற்றினாலும்

பகையால் வெல்ல முடியாமல்

உறுதி கொண்டதே அரணாகும்!


உள்ளே இருந்து பகைப்புலத்தை

வெல்லும் அமைப்பே அரணாகும்!

வலிமை உள்ள அரணெனினும்

நடுங்கும் வீரரால் பயனில்லை!


0 Comments:

Post a Comment

<< Home