நாடு--74
திருக்குறள் குழந்தைப் பாடல்
----------------------------------------------------------------
நாடு 74
----------------------------------------------------------------
நாட்டிற்குரிய நல்ல இலக்கணங்கள்
----------------------------------------------------------------
உழைப்போர், அறவழிச் சான்றோர்கள்
தன்னலம் இல்லாச் செல்வந்தர்
சேர்ந்து வாழ்வதே நாடாகும்!
மற்றவர் வந்து குடியேறும்
சுமையைத் தாங்கி வரிகளையும்
ஏற்கும் மக்களைக் கொண்டேதான்
மகிழும் நாடே நாடாகும்!
பசியும், நோயும், பகையுமின்றி
நிம்மதி கொண்டதே நாடாகும்!
குழுவின் பகையும், உட்பகையும்
கெடுமதி கொண்டோர் வன்முறையும்
இல்லா நாடே நாடாகும்!
பகையால் கேடுகள் சூழ்ந்தாலும்
குறையா வளங்கள் கொண்டேதான்
நிறைவாய் உள்ளதே நாடாகும்!
மலையும், ஊற்றுநீர், மழைநீரும்
ஓடிவரும் ஆற்றுநீர், கோட்டையும்
நாட்டு வளத்தின் உறுப்புகளாம்!
செல்வம், விளைச்சல், நோயின்மை,
மகிழ்ச்சி, காவல் இவையைந்தும்
நாட்டிற் கென்றும் அழகாகும்!
தேடி வருந்தும் நிலையின்றி
இயற்கை வளங்கள் செழித்திருக்க
நிமிர்ந்து வாழ்வதே நாடாகும்!
அன்பும் அறமும் இல்லாத
அரசால் எந்தப் பயனுமில்லை!

0 Comments:
Post a Comment
<< Home