Thursday, March 26, 2026

அவை அஞ்சாமை--73

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

அவை அஞ்சாமை--73

----------------------------------------------------------------

அறிவின் தெளிவே அஞ்சாமை!

----------------------------------------------------------------

சொல்லின் பொருளை உணர்ந்தவரோ

மறந்தும் பிழைபடப்  பேசமாட்டார்!


கற்றவர் மனதில் நிலைக்குமாறு

பேசும் ஆற்றல் உடையவரோ

அனைவரை விஞ்சும் கற்றவராம்!


பகைவ ரோடு போரிட்டே

துணிவுடன் சாவோர் பலருண்டு!


கற்றோர் அவையில் அஞ்சாமல்

பேசுதல் என்பது கடினந்தான்!


கற்றவர் அவையில் தான்கற்ற

அனைத்துப் பொருளையும் சொல்லவேண்டும்!


அதற்கும் மேலாய் அவர்களிடம்

கற்றுத் தெளிதல் அறிவுடைமை!


சொல்லின் இலக்கண நூல்கற்றே

அறிஞர் அவையில் பேசவேண்டும்!


அறிந்தோர் கேட்கும் விளக்கத்தை

விளக்க வேண்டும் அஞ்சாமல்!


அச்சம் கொண்டால் வாளெதற்கு?

அறிஞர் அவையில் அஞ்சுவோர்க்கு

கற்ற நூலால் என்னபயன்?

அறிஞர் அவையில் பேசிடவே

தயங்கும் மாந்தர், கற்காத

மாந்தரைக் காட்டிலும் கீழோராம்!

அவையைப் பார்த்துப் பயப்படுவோர்

வாழ்வில் என்றும் நடைப்பிணந்தான்!


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home