Thursday, March 26, 2026

நட்பு ஆராய்தல் -- 80


திருக்குறள் குழந்தைப் பாடல்!

----------------------------------------------------------------

நட்பு ஆராய்தல் -- 80

----------------------------------------------------------------

பரபரப்பான நட்பில் பக்குவத் தெளிவே இல்லை!

----------------------------------------------------------------

தெளிந்த நட்பில் பிரிவில்லை!

புரியா நட்பில் கேடுண்டு!


நன்மை தீமை ஆராய்ந்து

நட்பைப் படர விடவேண்டும்!


இல்லா விட்டால் சாகின்ற

நிலையை இங்கே உருவாக்கும்!


பன்முகப் பண்பை ஆய்ந்தேதான்

நட்பில் திளைப்பது நன்றாகும்!


பழிகளுக் கஞ்சும் நல்லவரை

விலைகொடுத் தேனும் நட்பாக்கு!


தடங்கள் மாறி நடப்போரை

கண்ணீர் சிந்தக் கண்டிக்கும்


நட்பு வளர்த்தால் பயனுண்டு!

துன்பமும் இங்கே நன்மைதான்!


உண்மை நட்பை அளப்பதற்கு

அதுவே கருவி யாகிவிடும்!


ஊக்கம் கெடுக்கும் செயல்களையும்

இன்னல் நிலையில் விலகுகின்ற

நட்பையும் இங்கே தவிர்க்கவேண்டும்!

சோதனை நேரம் கைவிடுவோர்

நட்பை நாமே இறக்கின்ற

நேரம் நினைத்தால் மனம்சுடுமே!


மாசே இல்லா நட்புதனை

நேசம் கொண்டே ஏற்கவேண்டும்!


மாசு படிந்த நட்புதனை

விலைகொடுத் தேனும் நீக்கவேண்டும்!






0 Comments:

Post a Comment

<< Home