கூடா நட்பு 83
திருக்குறள் குழந்தைப் பாடல்
---------------------------------------------------------
கூடா நட்பு 83
----------------------------------------------------------
கூடா நட்பு கேடாய் முடியும்
------------------------+-------------------------------
போலியாய்ப் பழகுவோர் நட்பிங்கே
தக்கநேரம் துண்டாடும் உலைக்கல்லாம்!
நல்லவர் போலப் பழகித்தான்
நட்பில் பொய்மை கொண்டவர்கள்
விலைமகள் மனம்போல் உள்ளொன்றும்
புறத்தில் ஒன்றுமாய்த் தோன்றிடுவார்!
நூல்கள் இங்கே கற்றாலும்
பக்குவம் இல்லா மாந்தர்கள்
நல்ல நண்பர் ஆகமாட்டார்!
முகத்தில் சிரிப்பும் அகத்தினிலே
காழ்ப்பும் கொண்டோர் நட்புதனைக்
கண்டே அஞ்சுதல் அறிவுடைமை!
மனமும் செயலும் வேறுபடும்
மாந்தர் சொல்வதை நம்பித்தான்
செயலில் இறங்கக் கூடாது!
நண்பர் போல நல்லவற்றைச்
சொல்வார்! உண்மை முகமூடி
கழன்று விழுந்தால் தலைகுனிவார்!
வில்லின் வணக்கம் தீங்காகும்!
பகைவன் பணிவும் அதுபோல்தான்!
பகைவர் வணங்கும் கரங்களுக்குள்
மறைந்தே இருக்கும் ஆயுதந்தான்!
அவர்கள் கண்ணீர் சதிச்செயலே!
நடித்துப் பழகும் நண்பரைப்போல்
நாமும் பழகி விலகவேண்டும்!
வாய்ப்பால் பகைவர் நண்பரானால்
அகத்தின் அளவில் இல்லாமல்
முகத்தால் சிரித்து விலக்கவேண்டும்!

0 Comments:
Post a Comment
<< Home