தீ நட்பு --- 82
திருக்குறள் குழந்தைப் பாடல்
---------------------------------------------------------
தீ நட்பு --- 82
-------------------------------------------------------
வேடமற்ற நட்பே நட்பாகும்
--------------------------------------------------------
அன்பைப் பொழிவது போல்நடிக்கும்
பண்பிலார் நட்பு வளராமல்
குறைந்து தேய்வது நலமாகும்!
பயன்தருமா? நட்பிழை பின்னுவார்!
இல்லையா? இழைகளை அறுத்தெறிவார்!
இத்தகைய நட்பு நட்பல்ல!
தன்னலம் போற்றும் நண்பர்கள்
இருமனப் பெண்கள், கள்வர்கள்
தன்மையில் ஒன்றே என்றுணர்வாய்!
போர்க்களந் தன்னில் தள்ளிவிட்டு
துரோகம் செய்யும் குதிரையைப்போல்
நண்பர் இருப்பதைக் காட்டிலும்
இல்லா திருத்தல் நன்மையாம்!
இழிமன நண்பர் அற்பர்கள்
களையென எண்ணித் தவிர்த்திடுவோம்!
அறிவிலி நட்பைக் காட்டிலும்
அறிஞர் பகையோ மேலாகும்!
போலிச் சிரிப்பைக் காட்டித்தான்
பழகும் நட்பைக் காட்டிலும்
பகைவர் பகைமை பலகோடி
நன்மை பயக்கும் உணர்வோமே!
சொல்வது ஒன்றும் செய்வதொன்றும்
இருநிலை நட்பு துன்பந்தான்!
வீட்டில் தனிமையில் போற்றுவதும்
அவையோர் மத்தியில் தூற்றுவதும்
கொண்டோர் நட்பை விலக்கவேண்டும்!

0 Comments:
Post a Comment
<< Home