பேதைமை -- 84
திருக்குறள் குழந்தைப்பாடல்
----------------------------------------------------------------
பேதைமை -- 84
---------------------------------------------------------------
வாழ்வை இருளில் தள்ளுவதே அறியாமை!
----------------------------------------------------------------
ஆக்கந் தன்னைக் கைவிட்டுக்
கேட்டைக் கொள்தல் அறியாமை!
தகாத செயலுக்கு நாணமின்மை
தகுந்ததை ஆய்வு செய்யாமை
உள்ளம் நெகிழும் அன்பின்மை
காப்பதை நாளும் காவாமை
இவைகள் அறிவிலிச் செயலாகும்!
நூல்களைக் கற்றும் பொருளறிந்தும்
விளக்கம் சொல்லும் திறனிருந்தும்
கற்றதை வாழ்க்கையில் போற்றாமல்
வாழ்பவன் உலகில் அறிவிலிதான்!
ஏழு பிறவி வேதனையை
இழிசெயல் மூலம் ஒருபிறவி
வாழ்வில் துடித்தே அனுபவிப்பான்!
ஒழுக்கம் தன்னை அறியாத
பேதை, செயலை மேற்கொண்டால்
சிறைக்கும் செல்ல நேரிடுமே!
பேதை யிடத்தில் பெருஞ்செல்வம்
இருந்தால் அயலார் அனுபவிப்பார்!
உற்றார் பெற்றோர் பசித்திருப்பார்!
அறிவிலி யிடத்தில் பொருள்கிடைத்தால்
பித்துப் பிடித்தோன் கள்குடித்து
போதையில் மயங்கும் நிலைபெறுவான்!
பேதையின் நட்பு இனிமைதான்!
பிரியும் நேரம் துளிகூட
ஏக்க உணர்வைப் பெறமாட்டோம்!
அறிஞர் அவையில் பேதையோ
நுழைவது இங்கே அசுத்தத்தை
மிதித்த காலைப் படுக்கைமேல்
வைத்த நிலையே உணர்ந்திடுவாய்!

0 Comments:
Post a Comment
<< Home