Thursday, March 26, 2026

குடிமை--96

 திருக்குறள் குழந்தைப் பாடல் 

---------------------------------------------------------------

           குடிமை -- 96

----------------------------------------------------------------

உருவைக் காட்டும் கண்ணாடி--

பண்பைக் காட்டும் நற்குடிதான்!

----------------------------------------------------------------

போற்றும் நாணமும் நடுநிலையும்

நற்குடிப் பிறந்தோ ரிடத்தில்தான்

இயல்பாய் இருக்கும்! பிறரிடத்தில்

இருப்ப தென்பதே சந்தேகம்!


நற்குடி சார்ந்த சான்றோர்கள்

ஒழுக்கம், வாய்மை, நாணமென்னும்

மூன்றில் இருந்து சரிவதில்லை!


ஈகை, இன்சொல், முகமலர்ச்சி

பிறரை இகழ்ந்து பேசாமை

நான்கும் நற்குடி மாந்தரிடம்

இயல்பாய்த் திகழும் பண்புகளாம்!


கோடி கொட்டிக் கொடுத்தாலும்

இகழ்ச்சிக் குரிய செயல்களையோ

நற்குடி மாந்தர் செய்யமாட்டார்!


புகழ்க்குடி பிறந்தோர் இயலாத

நிலையிலும் ஈகை தவறமாட்டார்!


மாசறு குடியில் பிறந்தவர்கள்

வஞ்சகந் தன்னைச் செய்யமாட்டார்!


உயர்குடி மாந்தரின் சிறுதவறும்

நிலவின் களங்கமாய்த் தெரிந்துவிடும்!


அன்பு மிளிரும் செயலிடையே

பண்பிலா பாதகம் தென்பட்டால்

நற்குடி தானா எனநினைப்பார்!


நிலத்தின் பண்பைப் பயிர்காட்டும்!

நற்குடிப் பண்பைச் சொல்காட்டும்!


தீமை செய்ய நாணவேண்டும்!

நற்குடி புகழ்பெற பணிவுவேண்டும்!

0 Comments:

Post a Comment

<< Home