சான்றாண்மை--99
திருக்குறள் குழந்தைப் பாடல்
----------------------------------------------------------------
சான்றாண்மை--99
----------------------------------------------------------------
நற்பண்பும் கடமை உணர்வும்
தனிமனித ஒழுக்கங்கள்!
----------------------------------------------------------------
கடமை தவறா சான்றோர்க்கு
நல்ல பண்புகள் இயல்பாகும்!
குணங்கள் சான்றோர்க் கழகாகும்!
மற்றவை எல்லாம் அழகல்ல!
அன்பு, பழிவாங்க நாணுதலும்
உள்ளதை ஈவதும், இரக்கமும்
உண்மை பேசுதலும் சான்றாண்மை
வீட்டைத் தாங்கும் தூண்களாகும்!
பிறஉயிர்க் கொல்லா திருப்பதுதான்
உண்மை தவத்திற் கழகாகும்!
பிறரது குறைகள் பேசாமை
சான்றாண் மைக்கே அழகாகும்!
பணிவே சிறந்த வலிமையாம்!
பகையை நட்பாய் மாற்றுகின்ற
சான்றாண் மைக்கே ஆயுதமாம்!
சிறியவ ரிடத்தும் தோல்விகளை
ஏற்கும் பக்குவ நற்பண்பே
தோற்றோர்க் குள்ள சான்றாண்மை
என்றே உரைக்கும் உரைகல்லாம்!
தீமை செய்த மனிதருக்கு
நன்மை செய்ய வில்லையெனில்
சான்றாண் மைக்குப் பொருளென்ன?
மனதின் வலிமை சான்றாண்மை!
இந்தப் பண்பு உள்ளோர்க்கு
இல்லா மையோ இழிவல்ல!
சால்புக் கடலென உள்ளவர்கள்
ஊழிக் காற்றே உலுக்கினாலும்
தனது நிலையில் தவறமாட்டார்!
சான்றோர் கொண்ட சான்றாண்மைப்
பண்புகள் குறையும் நிலைவந்தால்
அந்தச் சுமையை இவ்வுலகம்
தாங்கா திங்கே நற்றமிழே!
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home