Thursday, March 26, 2026

குடிசெயல்வகை -- 103

 திருக்குறள் குழந்தைப் பாடல்

--------------------------------------------------------------

குடிசெயல்வகை -- 103

----------------------------------------------------------------

குலப்பெருமையை உயர்த்துதல்!

----------------------------------------------------------------

குடியின் பெருமை காக்கின்ற

பெருமை போல வேறில்லை!


அறிவு, முயற்சி, செயல்திறத்தால்

ஒருவன் சார்ந்த குடியுயரும்!


பிறந்த குடியை உயர்த்துவேன்

என்றே உறுதி ஏற்பவனின்

துணைக்குத் தெய்வம் முந்திவரும்!


வீட்டின் நாட்டின் கடமையை

விரைந்து செய்யும் மாந்தருக்கு

ஆற்றல் தானாய் வந்துவிடும்!


குற்றம் இன்றிக் குடியுயர்த்தி

வாழ்பவன் தன்னைத் தங்களது

சுற்றம் என்றே சூழ்ந்திருப்பார்!


பிறந்த குடியை ஆள்கின்ற

சிறப்பைப் பெறுவதே ஆளுமையாம்!

போர்க்களக் கடமை வீரர்போல்

குடும்பப் பொறுப்பை வல்லவரே

சுமந்து கடமை ஆற்றிடுவார்!


சோம்பல் கொண்டு தன்னுடைய

பெருமை எண்ணி வாழ்ந்திருந்தால்

குடியே கெட்டுப் பாழாகும்!


வீட்டை நாட்டைக் காப்பதற்கு

முயற்சி செய்வோன் மேனியோ

துன்பத் திற்கே கொள்கலமோ?


துன்பம் தாக்கும் குடும்பத்தை

முட்டுக் கொடுத்துத் தாங்காத

ஆண்மகன் இல்லா நிலையிருந்தால்

துன்பம் கோடரி யாகிவிடும்!


0 Comments:

Post a Comment

<< Home