நாண் உடைமை --102
திருக்குறள் குழந்தைப் பாடல்
----------------------------------------------------------------
நாண் உடைமை --102
----------------------------------------------------------------
தீமைகள் செய்ய வெட்கப்படுதல்
---------------------------------------------------------------
தீமைகள் செய்ய நாணுவதே
உண்மை யான நாணமாகும்!
மங்கைக் குரிய நாணங்கள்
வேறு வகைதான் அறிவோமே!
உணவும் உடையும் மற்றவையும்
பொதுவாய் மக்களுக் குரியதுதான்!
நல்லார்க் குரியது நாணந்தான்!
உயிருக் கிருப்பிடம் உடம்பொன்றே!
நல்ல குணத்தை இருப்பிடமாய்க்
கொண்டே தங்கும் நாணந்தான்!
நாணம் சான்றோர்க் கணிகலனாம்!
நாணம் அற்ற பீடுநடை
பொறுக்க முடியா நோயாகும்!
தன்பழி பிறர்பழி இரண்டுக்கும்
வெட்கப் படுவோரை நாணமென்ற
பண்பின் உறைவிடம் என்றுரைப்பார்!
தன்னைக் காக்கும் வேலியாக
நாணந் தன்னைச் சான்றோர்தான்
கருதி வாழ்வார் அவனியிலே!
நாணமா? உயிரா? நெருக்கடியில்
உயிரை விடுவார் சான்றோர்கள்!
உயிரைக் காக்க நாணத்தைக்
கைவிட மாட்டார் நெறியாளர்!
பழிச்செயல் செய்ய நாணாமல்
வாழும் அற்ப னிடந்தன்னில்
அறமே தங்க வெட்கிநிற்கும்!
ஒழுக்கம் கெட்டால் குலப்பெருமை
குலையும்! ஆனால் நாணமில்லை,
எல்லா நன்மையும் அழிந்துவிடும்!
நாண உணர்வைப் புறக்கணித்து
நடப்பவர் நடையோ மரப்பொம்மை
கயிற்றால் இயக்கும் நடைபோலாம்!
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home