உழவு--104
திருக்குறள் குழந்தைப் பாடல்
--------------------------------------------------------------
உழவு --104
---------------------------------------------------------------
உலக உயிர்களின் இயக்கமே உழவு!
----------------------------------------------------------------
எத்தனைத் தொழில்கள் இருந்தாலும்
உழைப்புத் துன்பம் இருந்தாலும்
உழவுத் தொழிலே சிறந்ததாகும்!
உயிரி னங்கள் அனைத்தையுமே
தாங்கு கின்ற உழவர்கள்
உலகம் என்னும் தேருக்கு
இன்றி யமையா அச்சாணி!
உழுது உண்னும் உழவரையே
வணங்கி வாழ்வார் உலகத்தார்!
உணவை வழங்கும் கொடைப்பண்பால்
தங்கள் குடைக்கீழ் அனைவரையும்
உழவர் ஆளும் ஆற்றலுண்டு!
உழைத்தே வாழும் உழவர்கள்
யாசகம் கேட்டு வாழ்வதில்லை!
நாடி வந்து கேட்போர்க்கும்
உதவிகள் செய்து வாழ்கின்றார்!
உழவர் கைகள் முடங்கிவிட்டால்
பற்றைத் துறந்த துறவிகளும்
உலகில் வாழ்தல் கடினந்தான்!
ஒருபலம் புழுதி கால்பலமாய்
ஆக்கி உழுது காயவிட்டால்
பிடிஎரு இன்றிப் பயிர்விளையும்!
உழவில் முக்கியம் எருவிடலே!
களைகளை நீக்கி நீர்பாய்ச்சும்
நிலைவிடக் காப்பது சிறப்பாகும்!
இல்லாள் வெறுக்கும் தன்மைபோல்
நிலத்தைத் தவிர்க்கும் உழவனை
நிலமே வெறுத்துப் பார்த்திடுமே!
பொருளே இல்லை எனச்சொல்லி
சோம்பல் கொண்டே இருப்பவரை
நிலமகள் ஏளன மாகத்தான்
தனக்குள் சிரிப்பாள் பார்த்தேதான்!
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home