இரவு அச்சம் -- 107
திருக்குறள் குழந்தைப் பாடல்
--------------------------------------------------------
இரவு அச்சம் -- 107
----------------------------------------------------------
கேட்கும் நிலைக்கு பயப்படுதல்!
--------------------------------------------------------------
ஈந்து மகிழ்வோர் இல்லத்தை
நாடி நின்றே இரவாமல்
இருப்பதே உலகில் கோடிநன்மை!
பிச்சை எடுத்தே உயிர்வாழும்
சூழல் இங்கே வந்துவிட்டால்
உலகந் தன்னைப் படைத்தவனே
அலைந்து திரிந்து அழியட்டும்!
வறுமையைப் போக்க உழைக்காமல்
இரந்தே வாழ்வோம் எனநினைக்கும்
கொடுமை போல வேறில்லை!
வழியே இல்லை என்றாலும்
இரத்தலை ஏற்கா நற்குணமோ
உலகை விஞ்சும் பெருமைதான்!
சொந்த உழைப்பில் கூழெனினும்
சுவையில் நிகரோ வேறில்லை!
பசுவுக் காக நீர்கேட்கும்
நிலையும் இங்கே இரத்தல்தான்!
அதைப்போல் நாவுக் கிங்கேயோ
கேவலம் வேறு இல்லையம்மா!
இருப்பதை மறைக்கும் கருமியிடம்
பிச்சை எடுக்க வேண்டாமே!
இரத்தல் என்னும் மரக்கலமோ
மறைத்தல் என்னும் பாறைமேல்
மோதி நின்றால் நொறுங்கிவிடும்!
இரத்தல் கொடுமை உருகவைக்கும்!
மறைக்கும் கொடுமை பதறவைக்கும்!
இருப்பவர் மறைத்தால், கலக்கமுடன்
இரப்பவர் உயிரே போய்விடுமே!
இல்லை என்றே சொன்னவரின்
உயிர்தான் எங்கே ஒளிந்திடுமோ?
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home