Friday, March 27, 2026

வாழ்வியல் அந்தாதி 6-10


6.இங்கொன்றும் அங்கொன்றும் என்றே படித்துவிட்டுத்

 தன்னைப்போல் யாருமில்லை என்ற அகந்தையிலே

 தன்னடக்கம் கொண்டிருக்கும் சான்றோரைச் சீண்டினால்

 என்றும் அவமானந் தான்.

----------------------------------------------------------------------------------------------------------


7.தான்தான் எல்லாமே என்ற நிலையெடுக்கும்

 ஆணவப் போக்கை வளரவிட்டுத் துள்ளினால்

 ஈனமனப் பித்தனென்றே எள்ளிநகை யாடுவார்!

 மானே! தலைக்கனத்தைத் தூற்று.

----------------------------------------------------------------------------------------------------------------

8.தூற்றுவோர் சொல்லும் கருத்தில் பொருளிருந்தால்

 ஏற்றுக்கொள்! உன்னைத் திருத்திக்கொள்! இல்லையேல்

 தூற்றுவோரை அன்பால் வசப்படுத்தித் திருத்திவிடு!

 வேற்றுமையை ஒற்றுமையாய் மாற்று.

----------------------------------------------------------------------------------------------------------------------------------

9. மாற்றுவதை மாற்றினால்தான் முன்னேற்றம் ஏற்படும்!

 மாற்றத்தில் நேர்மறை மாற்றங்கள் நல்லது!

 மாற்றம் எதிர்மறை யாகிவிட்டால் ஏமாற்றம்

 ஊற்றெடுத்துச் சாடும் உணர்.


10. உணர்வு நிலையாகும்! பார்த்தவுடன் தோன்றும்

   உணர்ச்சியோ நீர்க்குமிழி போல மறையும்!

   உணர்ச்சிவசம் இன்றி உணர்வை வளர்ப்போம்!

   உணர்வுகளின் பின்னலே பண்பு.


0 Comments:

Post a Comment

<< Home