Friday, March 27, 2026

வாழ்வியல் அந்தாதி 36-40

 36.நொந்து தளரவைக்கும் சூழ்நிலைகள் தோன்றினால்

   சந்திக்க வேண்டும் தளராதே மானிடனே!

   சிந்தித்து மூண்டெழுந்தால் சூழ்நிலைகள் ஓடிவிடும்!

   சந்தித்து வாழ்தல் அறிவு.

------------------------------------------------------------------------------------------------


37.அறிவுத் திருக்கொயில் நம்முடைய உள்ளம்!

  அறிவைப் பயன்படுத்திச் செம்மையாய் வாழ்வோம்!

  வெறிகொண்டு கண்டதையும் நாடும் மடமை

  தறிகெட்ட வாழ்வைத் தரும்.


38.தருவதை அன்புடன் தந்தால் மகிழ்வார்!

  விருப்பின்றித் தந்தால் முகஞ்சுழித்துப் போவார்!

  துரும்பளவோ தூணளவோ என்னவென் றாலும்

  கருணை பொழியக் கொடு!


39.கொடுப்பதை இங்கே விளம்பரம் இன்றிக்

  கொடுப்பதே நன்கொடை யாகும்--அடுத்தவர்

  போற்றுவதற் காகக் கொடுத்தால் இழிவாகும்!

  ஏற்பவர் உள்ளம் சுடும். 


40.சுடுசொல்லை நாளும் அடுத்தவர் மீது 

  தொடுத்தேதான் இன்புறுதல் வேண்டாம்--தொடுத்தது

  மீண்டு தொடுத்தவரைத் தாக்கித் துடிக்கவைத்தால்

  ஏங்கித் தவிக்கும் மனது.

0 Comments:

Post a Comment

<< Home