வாழ்வியல் அந்தாதி 26-20
16.நினைவிலே நிற்கின்ற வண்னமிங்கே வாழ்ந்தால்
மனிதன் பிறவிப் பயனை அடைவான்!
நினைத்தாலே முள்ளானால் வாழ்ந்தநாட்கள் இங்கே
அனைத்துமே வீணென்று செப்பு.
17.செப்புமொழி இவ்வுலகில் எத்தனை வாழ்ந்தாலும்
அத்தனையும் எந்தமிழுக் கீடாமோ?--எப்படிப்
பார்த்தாலும் செந்தமிழின் செம்மைக்கோ ஒப்பில்லை!
தாய்த்தமிழை என்றும் வணங்கு.
18. வணங்கிவிட்டு நல்லவர்போல் வாழ்த்திவிட்டு நெஞ்சில்
இணக்கமின்றி மேலோட்ட மாகப் பழகும்
மனமிருக்கும் நண்பரைக் காட்டிலும் நேரில்
மனக்கசப்பைச் சொல்பவரே மேல்.
19. மேல்சாதி கீழ்ச்சாதி என்பதைத் தூக்கியெறி!
வாழ்க்கையில் நன்னெறியைப் போற்றுபவர் மேல்சாதி!
நாள்தோறும் தீயவழி செல்பவர்கள் கீழ்ச்சாதி!
வாழ்விலே சாதிவெறி தீங்கு.
20. தீங்கு விளைவிக்கும் தீவிர வாதிகளே!
தூண்டும் உணர்ச்சிக் கடிமையாகி வன்முறைக்
கூண்டுக்குள் குற்றவாளி யாகநிற்கும் கோலமேன்?
வேண்டாம் மிருகக் குணம்.

0 Comments:
Post a Comment
<< Home