Friday, March 27, 2026

வாழ்வியல. அந்தாதி 41-45

 41.மனதை அலைபாய விட்டுவிட்டால் போதும்!

  கணப்பொழுதும் நிம்மதியைக் காண்ப தரிது!

  மனதை நிலைப்படுத்தி உன்வச மாக்கு!

  அனைவரும் ஏற்பார் மதித்து.


42.மதிப்பை உயத்துவதும் தாழ்த்துவதும் பண்பே!

  மதிக்கப் பழகு! மதிக்கப் படுவாய்!

  மதிக்கத் தவறினால் பண்பற்றோர் என்றே

  ஒதுக்கித்தான் வைக்கும் உலகு.


43.உலகமே இப்பொழுது கைக்குள் அடங்கும்

  வியத்தகு மாற்றத்தை, நாளும் கணினிப்

  புரட்சி உருவாக்கி நாடுகளின் வாழ்க்கைத்

  தரத்தை உயர்த்தியதே இன்று.


44. இன்றிருப்போர் நாளையில்லை என்றிருக்கும் வாழ்க்கையில்

   என்னென்ன கோபங்கள்! என்னென்ன ஆர்ப்பாட்டம்!

   மண்ணுக்குள் மண்ணாக மக்கும் மனிதனே!

   பண்பகமாய் வாழப் பழகு.


45.பழகுவதில் என்றும் பரபரப்பாய் நெருங்கிப்

   பழகினால் உள்ளத்தில் பக்குவம் இல்லை!

   விலகிநின்ற போதும் விவேகத் தெளிவைப்

   பழகுகின்ற நட்பிலே காட்டு.

0 Comments:

Post a Comment

<< Home