Friday, December 26, 2008

பெற்றோர்

பெற்றவர் இறந்து விட்டால்
பெருந்துயர் இருள்தான் கவ்வும்!
மற்றவர் எல்லாம் இங்கே
மணித்துளி உறவே ஆவார்!

சுற்றமே ஆன போதும்
துணையென நிலைப்பா ருண்டோ?
வெற்றிடம் ஏற்ப டுத்தும்
வெறுமையில் மனமோ ஏங்கும்!

அரும்பென இருந்த போதும்
அவர்களோ அயர்ந்த தில்லை!
கரும்பெனப் போற்றிப் போற்றிக்
கருத்துடன் வளர்த்தார் பெற்றோர்!

தருவென உயர்வ தற்குத்
தகுதியை ஆக்கி விட்டுச்
சுருக்கென மறைந்தே போவார்!
சூடமாய்க் கரைந்தே போவார்!

உயிர்நிகர்க் குழந்தை கேட்டால்
உயிரினை உருக்கி யேனும்
தயக்கமோ சிறிதும் இன்றித்
தருவதே பெற்றோர் உள்ளம்!

சுயநலம் துளியும் அந்தத்
தூய்மையின் நினைவில் இல்லை!
உயர்ந்ததோர் தியாக வாழ்வின்
உருவமே பெற்றோர் என்பேன்!

மதுரை பாபாராஜ்
2001

0 Comments:

Post a Comment

<< Home