Friday, December 26, 2008

அம்மவோ ! இதுதான் வாழ்வோ?

பெண்ணெனப் பிறந்து விட்டால்
பிறந்தகம் விலக வேண்டும்!
கணவனின் கூட்டுக் குள்ளே
காரிகை நுழைய வேண்டும்!

கண்நிகர்ப் பெற்றோ ரெல்லாம்
கண்கவர் கான லாவார்!
தண்மதி,அமுதந் தன்னை
தனக்கென அருந்த லுண்டோ?

நம்மகள் எதிரி ருந்தும்
நமக்கொரு உரிமை இன்றி
பொம்மையைக் கடையில் பார்க்கும்
புதுநிலை பெற்று விட்டோம்!

அம்மவோ ! இதுதான் வாழ்வோ?
ஆசையோ குமிழி தானோ?
இமைகளில் கண்ணீர் தேங்க
இயம்புவர் பெற்றோ ரிங்கே!

அரும்பெனப் பிறந்த போது
அழுவதில் தொடங்கும் வாழ்க்கை
எரிதணல் சிதையில் வீழும்
இறுதிநாள் வரைக்கும் சீறும்!

எரிமலை போலப் பொங்கி
இருவிழி நீரைக் கொட்டச்
சருகெனக் காய்ந்தே போகும்!
சட்டென மறைந்தே போகும்!

மதுரை பாபாராஜ்
2002

0 Comments:

Post a Comment

<< Home