வளைகாப்பும் விளையாட்டும்
கைநிறைய வளையல்கள் கலைஅகத்தில் நாணம்
கைகொடுக்க மதிமுகத்தாள் நிலம்பார்க்க, கண்கள்
கைபிடித்த நாயகனின் இதயத்தைத் தொட்டுக்
கனித்தமிழில் கவிஎழுதிக் களித்திருக்கக் கண்டேன்!
கைகொடுத்துத் தோழிகளோ ஏந்திழையின் காதில்
கலகலப்பாய்க் கிசுகிசுக்க இன்பத்தால் துள்ளி
கைகொடுத்த தோழிகளை அன்புடனே தட்டிக்
காரிகையோ முத்தாக முறுவலித்தாள் அங்கே!
வளைகாப்பு நாயகனின் மனத்தென்றல் சென்று
வரலாற்று நாளான மணநாளைச் சுற்றி
களித்தாடி மணங்கமழ நிகழ்ச்சிகளை ஏந்திக்
கவிபாடி ஓவியத்தை எழுதியதும் கண்கள்
அளிஒன்று மலரொன்றில் ஊர்வதுபோல் மெல்ல
ஆரணங்குச் சிலைமீது படிப்படியாய்ச் செல்ல
வளைக்கரத்தாள் இதையுணர்ந்து குறும்பாகப் பார்க்க
வளர்ந்ததங்கே விளையாட்டு ரகசியத்தின் தோளில்!
மதுரை பாபாராஜ்
1989
0 Comments:
Post a Comment
<< Home