Wednesday, January 07, 2009

துள்ளும் நெஞ்சம்

தொலைவினில் இருக்கும் போது
துள்ளுது நெஞ்சம் பேச
அலையென அருகில் வந்தால்
அகத்தினில் ஊடல் பொங்கிச்

சிலையென மௌனம் பூண்டு
சிந்தனைச் சிறையில் இன்னல்
மலையென வளரச் செய்யும் !
மயங்கிட வைத்துக் கொல்லும் !

அன்புடன் மழைக்க ரங்கள்
அவனியைத் தழுவி நின்றால்
இன்புறும் உயிரி னங்கள்
எழுச்சியை விதைத்துப் பாடும் !

அன்பினில் உலவும் உள்ளம்
அடிக்கடி வாட நேர்ந்தால்
இன்னலின் கரம்பி டித்து
இயற்றிடும் சோகப் பாட்டு!

உருகிடச் செய்யும் அன்பே !
உலகினில் உன்னை யாரோ
அரும்பிடச் செய்தார்? அந்த
அறிஞனைப் பார்க்க வேண்டும்!

சுருக்கெனத் தைக்கும் முள்ளும்
சுடச்சுடப் பரவும் தீயும்
வருத்திட வீசும் காற்றும்
வணங்கியே உன்முன் தோற்கும்!

மதுரை பாபாராஜ்
1985

0 Comments:

Post a Comment

<< Home