Sunday, January 04, 2009

வடுமனப் பார்வை வேண்டாம்!

நிகழ்வுகள் நெருட லானால்
நெஞ்சமோ கொதித்துப் போகும்!
மடமட வென்றே சாயும்
மரங்களாய் அமைதி வீழும்!

தேற்றுவார் தேற்றி னாலும்
தேறிட மறுத்துப் பேசும்!
ஆற்றினில் அடித்துச் செல்லும்
ஆலிலை நிலையை ஏற்கும்!

சூழ்நிலைக் கைதி யாகும்!
சுடுதணல் புழுவாய் மாறும்!
பாழ்நிலை நோக்கி நாளும்
பதறியே துடித்து வாழும்!

கோபமோ சூறைக் காற்றைக்
கொந்தளித் தேதான் சீறும்!
சீறலில் சொற்கள் கூட
சிறுமையை ஏந்திக் கொட்டும்!

நடுநிலை உணர்வைக் கொண்டு
நடப்பதைப் புரிந்து கொண்டு
வடுமனப் பார்வை இன்றி
வாழ்ந்திடு அமைதி தோன்றும்!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home