Saturday, December 27, 2008

கரித்துண்டே வாழ்க்கை

எரிந்து விழுந்த கரித்துண்டே !
எனக்கு வாழ்க்கை நீதானே!
தெருவில் நித்தம் ஓவியத்தைத்
தெரிந்த அளவில் வரைகின்றேன்!

பார்த்து ரசிக்கும் எல்லோரும்
பாராட் டைத்தான் பொழிகின்றார் !
ஆர்வ முடனே காசுகளை
அங்கங் கேதான் வீசுகின்றார்!

திறமை இருந்தும் வாய்ப்பிலை!
தெருவை நம்பி வாழ்கின்றேன்!
முறையைக் கற்க வழியில்லை!
முழுமை இன்றி அலைகின்றேன்!

வறுமை என்னை வதைக்கிறது!
வாழ்க்கைத் துணையோ கரித்துண்டே!
பொறுமைத் தணலில் நடக்கின்றேன்!
பொழுதும் விடியும் நம்புகின்றேன்!

மதுரை பாபாராஜ்

1 Comments:

Blogger cheena (சீனா) said...

அருமை அருமை - வீதியில் வரையும் ஓவியனின் வாழ்க்கை நன்கு விளக்கப் பட்டிருக்கிறது. என்ன செய்வது - முறையாய் முறையைக் கற்க வழியுமில்லை - மேபடுட்த்த வசதியுமில்லை.

எளிய சொற்களில் ஆழ்ந்த சிந்தனை

நல்வாழ்த்துகள்

இந்த வேர்டு வெரிபிகேசன் தேவையா - சிந்திக்கலாமே !

7:34 PM

 

Post a Comment

<< Home