இல்லறக்கொலை
கத்தியின்றி இரத்தமின்றி கொலை!
கணவனின் இலையில் சேறும்
கயவனின் இலையில் சோறும்
குணவதி இட்டால் அந்தக்
கொடுமையைக் கொலைதான் என்பேன்!
மனைவியைத் தவிக்க விட்டு
மற்றவ ளோடு சுற்றும்
கணவனின் துரோகம் இங்கே
கண்டனக் கொலைதான் என்பேன்!
மனைவியை அடிமை யாக்கி
வக்கிர மனத்தால் ஆட்டும்
கணவனின் விலங்குப் போக்கு
களைநிகர்க் கொலைதான் என்பேன்!
கணவனைத் துச்ச மாகக்
கருதியே மாற்றார் முன்னே
மனைவியோ ஏசும் போக்கை
மலைநிகர்க் கொலைதான் என்பேன்!
இல்லற ஒழுக்கந் தன்னை
இருவரும் ஏற்றே வாழ்ந்தால்
நல்லறத் தென்றல் வீசும்!
நாளெலாம் இன்பம் பாடும்!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home