Monday, March 16, 2009

வாழையடி வாழை

-----------------------------------------
ஓடி விளையாடிக் கீழே விழுந்தெழுந்தும்
பாடிப் பறக்கின்ற பால பருவத்தை
ஊதியே தள்ளிவிட்டுப் பள்ளிக்குச் செல்வதற்கு
நாடியே நிற்பார் அடுத்து.

பள்ளிப் பருவத்தில் சாதனை முத்தை
அள்ளி அரவணைக்க ஊக்கமுடன் கற்றிடுவார்!
பிள்ளை படிக்கும் அழகினைப் பெற்றோர்கள்
சொல்லி மகிழ்ந்திருப்பார் காண்.

கல்லூரிக் காளைப் பருவத்தைத் தொட்டேதான்
எல்லாத் துறைகளிலும் கால்பதிக்க நாடுவார்!
எல்லையோ வானந்தான்! ஆனமட்டும் வெற்றியுடன்
நல்வாய்ப்பை நாடுவார் பார்.

வாய்ப்பு வளத்தால் ஒருவாறாய் வேலைக்குப்
போய்வந்து சம்பளம் வாங்கியதும் தாய்தந்தை
கால்களைத் தொட்டேதான் ஆசிகளை வாங்கிடுவார்
வழ்விலே நம்பிக்கை வைத்து.

மணப்பருவம் வந்ததும் இல்லறத்தை ஏற்க
குணவதியின் கைத்தலம் பற்றி -- மணக்கும்
குடும்பப் பொறுப்பை இருவரும் போற்றி
பெறுவார் குழந்தை இரண்டு.

குழந்தை வளர்ப்பில் கரைந்திடும் காலம்!
மழலைக் குறும்புகள் வாழ்வின் கவர்ச்சி!
வளரும் பருவங்கள் மாற அவர்கள்
வளர்ச்சியைக் காண்பார் மகிழ்ந்து.

குழந்தைக்கு இங்கே குழந்தை பிறக்கும்!
தளர்ந்த பருவத்தில் பேரக் குழந்தை
தழுவி விளையாட கண்குளிரப் பார்த்து
பெருகும் மகிழ்ச்சிதான் வழ்வு.

தாத்தாவும் பாட்டியும் ஓட முடியாமல்
போற்றி வளர்த்திருப்பார்! பேரக் குழந்தைகள்
தாத்தாவை பாட்டியை வம்பிழுத்து நாள்தோறும்
கூத்தாட வைத்திருப்பார் கூறு.

நேற்றுநம் பெற்றோர்க்கு! இன்று நமக்குதான்!
வீட்டில் நம்பிள்ளை நாளை சுமந்திருக்கும்!
நாட்டில் வாழையடி வாழைதான் இக்கடமை!
வீட்டுக்கு வீடிதுதான் பார். .

0 Comments:

Post a Comment

<< Home