Sunday, February 28, 2010

கம்பராமாயணக் காட்சிகள

=======================
விழித்தெழுந்த மக்கள் இராமனைக் காணாது வருந்துதல்
----------------------------------------------------------------------------------------
வருந்தா வண்ணம் வருந்தினார்
மறந்தார் தம்மை; வள்ளலும் ஆங்கு
இருந்தான் என்றே இருந்தார்கள்
எல்லாம் எழுந்தார்; அருள் இருக்கும்
பெருந் தாமரைக்கண் கருமுகிலைப்
பெயர்ந்தார்; காணார்;பேதுற்றார்;
"பொருந்தா நயனம் பொருந்து நம்மை
பொன்றச் சூழ்ந்த", எனப் புரண்டார்.(2014)
========================================================

தாமரைக் கண்ணான் இராமனோ தங்களுடன்
சேமமாய்த் தூங்குகிறான் என்றெண்ணி மக்கள்தாம்
ஆவலுடன் அங்கிருந்தார்! அண்ணலைக் காண்பதற்கு
நேயமுடன் நின்றார் எழுந்து.

திரண்டெழுந்து சென்றார் இராமனைக் காண!
கலங்கினார் காணாது! என்றுமே தூங்கா
நயனங்கள் இன்றோ சதிசெய்து தூங்கி
துயரத்தைத் தந்ததென்றார் அங்கு .

வருந்தி வருந்தி தரையில் விழுந்தார்!
புரண்டு புரண்டே அழுதார்! துடித்தார்!
இரண்டு விழிகளையும் தொட்டுப் பழித்தார்!
உழன்றார் உளைச்சலில் நொந்து.








இராமன் வனம் புகுந்ததையும்
தசரதன் இறந்த்தமையையும் அறிந்து வருந்துதல்
=====================================================
புக்கார், அரசன் பொன்னுலகம்
போனான் என்னும் பொருள் கேட்டார்;
உக்கார் நெஞ்சம், உயிர் உகுத்தார்;
உற்றது எம்மால் உரைப்ப அரிதால்;
தக்கான் போனான் வனம் என்னும்
தகையும் உணர்ந்தார்;மிகை ஆவி
அக்காலத்தே அகலுமோ? அவதி
என்று ஒன்று உளதானால்?(2019)
=====================================================
வானகம் சென்றான் தசரதன் என்பதையும்
கானகம் சென்றான் இராமன்தான் என்பதையும்
ஊனகம் கேட்டிருக்க உள்ளம் உடைந்தனர்!
ஏன்வாழ வேண்டுமென்றார்? பார்.

நினைத்ததும் இவ்வுயிர் போய்விடுமா? என்ன!
அனைத்துமே காலம் கணிப்பதுதான் வாழ்வில்!
நினைக்கின்றார் சாவதற்கு! ஆனால் நேரம்
கனியவில்லை !வாழ்கின்றார் ! காண்



மூவரும் மருத நிலக் காட்சிகள் கண்டு செல்லுதல்.
====================================================
அளிஅன்னது ஓர் அறல் துன்னிய
குழலாள்; கடல் அமுதின்
தெளிவு அன்னது ஓர் மொழியாள்;
நிறைதவம் அன்னது ஓர் செயலாள்;
வெளி அன்னது ஓர் இடையாளொடும்
விடை அன்னது ஓர் நடையான்
களிஅன்னமும், மடஅன்னமும்
உடன் ஆடுவ கண்டான். (2023)
===========================================
கருமணல் போலச் செறிந்தநல் கூந்தல்,
திருப்பாற் கடலமுதச் சொற்களும், கற்புச்
செருக்கின் ஒழுக்கமும், ஆகாயம் போல
இருக்கிறதோ அன்றி இல்லையோ என்றே
கருதுவதைப் போன்ற இடையழகும் கொண்ட
கலையெழில் சீதையுடன் ராமன்,வழியில்
விளையாடும் ஆண்அன்னம் பெண்அன்னம் கூடும்
மருதநிலக் காட்சியைப் பார்த்தார்! ரசித்தார்!
பருகினார் கண்களால் பார்.



அஞ்சு அம்பையும்,அய்யன் தனது அலகு அம்பையும் அளவா
நஞ்சங்களை வெலல் ஆகிய நயனங்களை உடையாள்,
துஞ்சும் களிவரி வண்டுகள் குழலின்படி சுழலக்
கஞ்சங்களை மஞ்சன்கழல் நகுகின்றது கண்டாள்.(2024)
=============================================================
திருவடியா? அல்லது தாமரைப் பூவா?
பிரித்தறிய ஏலாமல் வண்டுகள் சூழ்ந்து
ராமனின் காலடியைக் கண்டு நகைப்பதைக்
கோமகள் பார்த்தாள் ரசித்து.





கம்பராமாயணக் காட்சிகள
=======================
மாகந்தமும் மகரந்தமும், அளகம் தரும் மதியின்
பாகம்தரும் நுதலாளொடு, பவளம் தரும் இதழான்
மேகம்தனி வருகின்றது மின்னொடு என, மிளர்பூண்
நாகம் தனி வருகின்றது பிடியொடு என, நடவா,(2025)
======================================================
மணக்கின்ற கூந்தல் பிறைநிலவு நெற்றி
தனக்கென ஏந்திவரும் சீதையுடன் செம்மை
மணக்கும் இதழ்கொண்ட ராமனோ அங்கே
அணங்குடன் வந்தான் நடந்து.

எப்படி வந்தான்? இடிமுழக்கம் செய்யாமல்
எப்படி மேகமொன்று மின்னலுடன் மட்டுமே
முற்றும் தனித்து வருவது போலத்தான்
குற்றமற்றோன் வந்தான் நடந்து.

கிம்புரி பூணணிந்த கம்பீர ஆண்யானை
தன்னுடைய பெண்யானை யோடெந்த ஆரவாரம்
இன்றித் தனித்து வருவதுபோல் காட்டிலே
சென்றானே சீதையுடன் தான்.



தொளை கட்டிய கிளை முட்டிய சுருதிச்சுவை அமுதின்,
கிளை கட்டிய கருவிக் கிளர் இசையின், பசை நறவின்,
விளை கட்டியின், மதுரித்து எழுகிளவிக் கிளி விழிபோல்,
களைகட்டவர் தலைவிட்டுஎறி குவளைத் தொகை கண்டாள்.(2026)
===================================================================
புல்லாங் குழலின் இசையை, நரம்புயாழ்
மெல்லிசையை, தேனின் இனிமையை, கற்கண்டின்
பாகினிமை, காட்டிலும் பச்சைக் கிளிபோல
பாகுமொழி சீதையின் கண்கள்ஒத்து கூட்டமாய்
ஆடும் கருங்குவளைக் கொத்தைக் களைஎன்றே
ஓடிப் பறித்தே உழவர்கள் அங்கெறிந்து
நாடிநின்ற காட்சியைப் பார்த்து ரசித்திருந்தாள்
ஈடற்ற சீதைதான் அங்கு.



அருப்பேந்திய கலசத்துணை, அமுதுஏந்திய மதமா
மருப்பேந்திய எனலாம் முலை, மழைஏந்திய குழலாள்
கருப்பேந்திரம் முதலாயின கண்டாள்; இடர்காணாள்;
பொருப்பேந்திய தோளானொடு விளையாடினள், போனாள்.(2027)
================================================================
அழகின் அமுதக் கலசமாய் சீதை
செழிக்கும் மருதவழி செல்கின்ற போது
பிழியும் கரும்பாலை கண்டுதான் சென்றாள்
வழித்துயர் எல்லாம் மறந்து.

மலைபோன்ற தோளுடைய மேகவண்ணன் ராமன்
சிலைஏந்தி சீதை யுடன்சென்றான்! அந்தச்
சிலைமேனி சித்திரத்தாள் இன்பம் கனிய
விளையாடிச் சென்றிருந்தாள் வென்று.



பல்நந்து உகுதரளம் தொடர் படர்பந்திகள் படுநீர்;
அன்னம்துயில் வதி தண்டலை; அயல்நந்து உறையும் புளினம்,
சின்னம் தருமலர் சிந்திய செறி நந்தனவனம், நன்
பொன் நந்திய நதி, கண்டு உளம் மகிழ்ந்தனர், போனார் (2028)
================================================================
முத்து திரண்டிருக்கும் நீர்நிலைகள்; அன்னங்கள்
தத்தித் துயில்கின்ற சோலைகள், பூச்சிகள்
சுற்றும் மணற்குன்று, பூங்கா, நதிகளையும்
சுற்றுமுற்றும் பார்த்தார் ரசித்து.





கம்பராமாயணக் காட்சிகள்
==============================
மூவரும் கங்கைக் கரையை அடைதல்
=========================================
பரிதி பற்றிய பல்பகல் முற்றினர்,
மருதவைப்பின் வளம்கெழு நாடு ஒரீஇச்
சுருதிகற்று உயர் தோம்இலர் சுற்றுறும்
விரிதிரைப் புனல் கங்கையை மேவினார்.(2030)
---------------------------------------------------------------------
வெண்பா!
----------------
பரிதி ஒளியின் பலபகளைத் தாண்டி
மறுத்த வளங்கொண்ட கோசல நாட்டைப்
பிரிந்து, முனிவர்கள் வாழ்கின்ற கங்கைக்
கரையை அடைந்தனர் காண்
-----------------------------------------------------------------------------
முனிவர்கள் ராமனைக் காணவருதல்
=======================================
கங்கை என்னும் கடவுள் திருநதி
தங்கி வைகும் தபோதனர் யாவரும்
"எங்கள் செல்கதி வந்தது" என்று ஏம்உறா
அங்கண் நாயகற் காணவந்து அண்மினார்.(2031)
==================================================
வெண்பா
-------------
கங்கைக் கரையில் இராமனோ வந்துவிட்டான்!
என்றசேதி கேட்டு முனிவர்கள், தாங்களே
சென்றடையத் தேடும் புகலிடமே இங்குவந்து
நின்றதென எண்ணி இராமனைக் காண்பதற்கு
வந்தனர் அண்ணல் இருக்குமிடம் நாடித்தான்!
அன்பன் அருளே அருள்.
----------------------------------------------------------------------------------------------
கங்காதேவி இராமனைப் போற்றுதல்
=====================================
கன்னி நீக்க அரும் கங்கையும் கைதொழாப்
'பன்னி நீக்க பாதகம் பார் உளோர்
என்னின் நீக்குவர், யானும் இன்று என்தந்த
உன்னின் நீக்கினேன்; உய்ந்தனன் ஆம்' என்றாள்.(2038)
=========================================================
பாவங்கள் செய்த மனிதர்கள் என்னிடம்
ஆவலுடன் வந்தேதான் நீராடிப் போக்குவார்!
நேயமுடன் அந்தந்தப் பாவத்தை நான்சுமந்தேன்!
கார்முகமே! சித்திரமே! என்னைநீ தோற்றுவித்தாய்!
நீவந்தே என்னிடத்தில் நீராடி நின்றதாலே
பாவங்கள் என்னைவிட்டு நீங்க கடைத்தேறி
கூவுகின்றேன நான்தான் மகிழ்ந்து.
----------------------------------------------------------------------------------

கங்கை செவிலித்தாய் போல் நீராட்டுதல்
===========================================
நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால்
நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி
உரைத்த சீதை தனிமையை உன்னுவாள்
திரைக்கை நீட்டிச் செவிலியின் ஆட்டினாள்.(2043)
================================================
வெண்பா
---------------
சீதை, தனியாக வந்ததை எண்ணித்தான்
வேகமாய் ஆடும் அலைக்கரத்தை நீட்டியே
மாதரசி கங்கை செவிலித்தாய் போலவே
கோதிவிட்டு நீராட்டி னாள்.




கம்பராமாயணக் காட்சிகள்
==========================
காணிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு குகன் வேண்டுதல்
===========================================================
இருத்தி நீ என்னலோடும், இருந்திலன்;எல்லை நீத்த
அருந்தியன், "தேனும் மீனும் அமுதினுக்கு அமைந்த ஆகத்
திருத்தினென்,கொணர்ந்தேன்;என்கொல் திருவுளம்?என்ன,வீரன்
விருத்த மாதவரை நோக்கி முறுவலன்,விளம்பலுற்றான்.(2062)
=================================================================
வெண்பா
----------------
காணவந்த அன்புக் குகனை அமருமாறு
தேனொழுகச் சொன்னான் இராமன்தான் -- வானளவுப்
பண்பாய் மரியாதை தந்தே அமரவில்லை
நின்றிருந்தான் அங்கே குகன்.

தேனுடன் மீனும் உணவாக உங்களுக்கு
நானிங்கே கொண்டுவந்தேன் உம்கருத்து யாதென்றான்!
ஈனமனம் இல்லாமல் அண்ணல் இளநகை
பூண்டே உரைத்ததைப் பார்.
--------------------------------------------------------------------------------------------
இராமன் காணிக்கையைப் பாராட்டுதல்
=========================================
அரிய, தாம்உவப்ப,உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக்கொணர்ந்த,என்றால், அமுதினும் சீர்த்த அன்றே!
பரிவினில் தழீஇய என்னின் பவித்திரம்;எம்மனோர்க்கும்
உரியன;இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ!"என்றான்.(2063)
===================================================================
வெண்பா
---------------
அன்பினால் உண்டான பக்தி தெரியுமாறு
கொண்டுவந்த எந்த உணவெனினும் அவ்வுணவு
நன்சுவை ஏந்தும்!அமிழ்தினும் நன்றுதான்!
உண்பதற்கும் தூய்மைதான் சொல்.

எனக்கும் தவம்புரியும் சான்றோர் களுக்கும்
மனதார ஏற்பதற்கும் ஏற்றதுதான்! நாங்களும்
உண்டுவிட்ட காரணத்தால் உண்டதுபோல் ஏற்கின்றோம்
அன்புடன் என்றான் மகிழ்ந்து.


கம்பராமாயணக் காட்சி
==================================================
இராமனும் சீதையும் தருப்பைப் புல்லில் துயிலுதல்
==================================================
மாலைவாய் நியமம் செய்து,மரபுளிஇயற்றி,வைகல்
வேலைவாய் அமிழ்து அன்னாளும்,வீரனும் விரித்த நாணல்
மாலைவாய்ப் பாரின் பாயல் வைகினர்; வரிவில் ஏந்திக்
காலைவாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான்.(2070)
===============================================================
அமிழ்தினை ஒத்திருக்கும் சீதையும், அண்ணல்
தவநெறிச் சான்றோன் இராமனும் அங்கே
தருப்பைப்புல் மீதேதான் அந்த இரவில்
கரங்கொண்டு தூங்கினார் காண்.

தம்பி இலக்குவன் துஞ்சாமல் வில்லேந்தி
கண்ணயர்வு இன்றி விடியல் வரும்வரைக்கும்
நின்றேதான் காவல் புரிந்திருந்தான் பாசமுடன்!
என்னே கடமை உணர்வு.

நறுமணம் சூழ்ந்திருக்கப் பஞ்சுமெத்தை மீது
படுத்துறங்க வேண்டிய சீதை,இராமன்
உறுத்தும் தருப்பைப்புல் மேலே அன்று
படுத்த கொடுமையைப் பார்.















தாமரை மலர்தல்
=====================
செஞ்சவே சேற்றில் தோன்றும் தாமரை, தேரில் தோன்றும்
வெஞ்சுடர்ச் செல்வன் மேனி நோக்கின விரிந்த,வேறுஓர்
அஞ்சன ஞாயிறு அன்ன ஐயனை நோக்கிச் செய்ய
"வஞ்சிவாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்ததன்றே!(2073)
===============================================================
சூரியனைக் கண்டவுடன் தாமரைப் பூமலரும்!
நேரிழையாள் சீதை முகமோ கருவண்ண
ராமனைப் பார்த்ததும் செவ்வண்ணப் பூவான
தாமரை யாய்மலர்ந்த தங்கு.
----------------------------------------------------------------------------------------------------------
. கங்கை கடந்து செல்லுதல்
==========================
பாலுடை மொழியாளும்,பகலன் அனையானும்
சேலுடை நெடுநல்நீர் சிந்தினர் விளையாடத்
தோலுடை நிமிர்கோலில் துழவிட,எழும் நாவாய்
காலுடைநெடு ஞெண்டின் சென்றது கடித்து அம்மா!(2083)
========================================================
கயலினங்கள் துள்ளி விளையாடும் கங்கை
வழங்குகின்ற நீரெடுத்தே சீதை, இராமன்
குழந்தைகள் போலத்தான் மாறிமாறி வீசி
விளையாடிச் சென்றார் மகிழ்ந்து.

நண்டொன்று வேகமாய்ச் செல்வதுபோல் ஓடமும்
அண்ணலும் அன்பரசி சீதையும் லெட்சுமணன்
அன்புடனே கூடவர கங்கையில் சென்றது!
கண்கொள்ளாக் காட்சிதான் சொல்.
===========================================================






குகனுக்கு இராமன் மறுமொழி
==============================================================
அன்னவன் உரைகேளா, அமலனும் உரை நேர்வான்;
"என்னுயிர் அனையாய் நீ; இளவல் உன் இளையான்;
இந்நன்னுதல் அவள் நின்கேள்; நளிர்கடல் நிலமெல்லாம்
உன்னுடையது; நான் உன்தொழில் உரிமையில் உள்ளேன்.(2090)
==============================================================
என்னுயிர் போன்றவன்நீ! என்தம்பி உன்தம்பி!
என்னவள் சீதை உனக்குக் கொழுந்தியாள்!
உன்னேவல் ஏற்கும் உரிமை யுடையவன்நான்!
உன்னுடைய திந்த உலகு.

"துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல்;
முன்பு உளம் ஒரு நால்வேம்;முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்.(2091)
===============================================================
துன்பம் இருந்தால்தான் இன்பம் தெரியவரும்!
பின்வரும் இன்பத்தை எண்ணாமல் நம்பிரிவை
எண்ணிக் கவலைப் படாதே! உன்னுடன்
இன்றோடு ஐவரானோம் பார்.
குகன் விடைபெறுதல்,இராமன் முதலியோர் கானகம் புகுதல்
------------------------------------------------------------------------------------------------
பணிமொழி கடவாதான், பருவரல் இகவாதான்
பிணி உடையவன் என்னும் பேதினன், விடை கொண்டான்;
அணிஇழை மயிலோடும், ஐயனும், இளையோனும்
திணிமரம் நிறை கானில் சேண் உறுநெறி சென்றார். (2094)
===============================================================
பிரிவுத் துயர மயக்கத்தில் அங்கே
நலிவுற்ற தூயோன் குகனோ நகர்ந்தான்!
இலக்குவனும்,ராமனும், சீதையும் காட்டு
வழியில் நடந்தனர் சேர்ந்து.
===============================================================

கம்பராமாயணக் காட்சி
========================
இராமன் வனம்புகுந்த காலநிலை
---------------------------------------
பூரியர் புணர்மாதர் பொதுமனம் என,மன்னும்
ஈரமும் உளது,இல் என்று அறிவுஅரும் இளவேனில்,
ஆரியன் வரலோடும், அமுதுஅளவிய சீதக்
கார்உறுகுறி வானம் காட்டியது அவண் எங்கும்.(2095)
=======================================================
பஃறொடை வெண்பா
====================
ஈரம் இரக்கம் தவிர்க்கும் பொதுப்பெண்டிர்
நேரமனம் போல இளவேனில் காலமென
சார்ந்துரைக்க ஏலாமல், துள்ளும் வறட்சிநிலை
பார்க்கும் முதுவேனில் என்றுரைக்க ஏலாமல்
தோய்ந்திருக்கும் காலநிலை கொண்டிருந்த கோலங்கள்
கார்வண்ணன் ராமனின் காலடிகள் பட்டதும்
தேனமுதம் ஒன்றிக் கலந்த குளிர்காலம்
கானக மேனியில் பூத்துக் குலுங்கவைத்து
வானகம் வாழ்த்தினைத் தூவிக் களித்தது!
கானகத்தின் காலமாற்றம் பார்.
==========================================================
இராமன் சீதைக்குக் காட்டிய வழியிடைக் காட்சிகள்
==================================================
"நெய்ஞ்நிறை நெடுவேலின் நிறம்உறு திறம்முற்றிக்
கைஞ்நிறை நிமிர்கண்ணாய்! கருதின இனம் என்றே
மெய்ஞ்நிறை விரி சாயல் கண்டு, நின்விழி கண்டு,
மஞ்ஞையும் மட மானும் வருவன இவைகாணாய்!"(2100)
============================================================
சீதையுன் மேனியின் சாயலைக் கண்டேதான்
தோகைமயில் நாடிவரும் உள்ளங்கை போலளவில்
பாகுவிழி கொண்டதனால் மான்கள் உனைனாடித்
தேடிவரும் காட்சிகளைப் பார்.

"குன்றுஉறை வயமாவின் குருளையும், இருள்சிந்திப்
பின்றின எனல் ஆகும் பிடி தருசிறு மாவும்
அன்றில பிரிவு ஒல்லா அண்டர்தம் மனை ஆவின்
கன்றொடு விளையாடும் களியன பல காணாய்!"(2104)
===========================================================
சிங்கம் புலிகளின் குட்டிகளும் யானையின்
கன்றுகளும் அங்கே இடையர்கள் வீடுகளில்
வந்து பசுங்கன் றுடனே விளையாடும்
கண்கொள்ளாக் காட்சியைப் பார்.
"அடிஇணை பொறைகல்லா என்று கொல், அதர் எங்கும்
இடையிடை மலர்சிந்தும் இனம்மரம் இவை காணாய்!
கொடியினொடு இளவாசக் கொம்புகள், குயிலே! உன்
துடிபுரை இடைமானத் துவள்வன இவை காணாய்!"(2110)
=============================================================
சீதையே! உன்பாதம் நோகுமென்று கற்கள்மேல்
பாதை முழுவதும் பூக்கள் நிரப்பியது!
தோகையே! பூங்கொம்பு உன்னிடைபோல் ஊசலாடி
ஆகா! அசைவதைக் காண்.
பாரத்துவாசர் இராமனைக் கண்டு வருந்துதல்
=============================================
அம்முனி வரலோடும், அழகனும் மலர்தூவி
மும்முறை தொழுதான்;அம்முதல்வனும் எதிர்புல்லி,
"இம்முறை உருவோ நான் காண்குவது?" எனஉள்ளம்
விம்மினன்;இழி கண்ணீர் விழிவழி உக நின்றான்.(2117)
========================================================
பரத்துவாச சான்றோன் இராமனிடம் வந்தார்!
மலர்களால் தூவியே மும்முறை ராமன்
வலம்வந்தான்!வந்தபின் வீழ்ந்து வணங்க,
களங்கமற்ற மாமுனி ராமனை ஆரத்
தழுவினார்! ராமனின் கோலத்தைக் கண்டு
கலங்கினார்! கண்ணீர் சொரிந்தார்!சான்றோன்
உளமார நொந்தார் உணர்.
============================================================
பரத்துவாச முனிவன் காரணம் கேட்டல்
=======================================================
"அகல்இடம் நெடிது ஆளும் அமைதியை, அதுதீரப்
புகலிடம் எமதாகும் புரையிடை,இதுநாளில்,
தகவுஇல் தவவேடம் தழுவினை வருவான் என்?
இகல்அடு சிலைவீர! இளையவனோடும்?" என்றான்.(2118)
============================================================
பூமியை நீண்டகாலம் ஆள்வதை விட்டுவிட்டுக்
காவிகள் வாழ்கின்ற காட்டுக்குள் வந்ததேன்?
ஆவியும் ஏற்காத கோலமுடன், தம்பியுடன்
நீவந்த காரணத்தைச் சொல்.
----------------------------------------------------------------------------------------------------

முனிவன் வருந்துதல்
------------------------------------
உற்றுள பொருள் எல்லாம் உணர்வுற உரைசெய்தான்;
நற்றவமுனி,அந்தோ!விதிதரும் நவை" என்பான்;
"இற்றது,செயல்உண்டோ? இனி"என இடர் கொண்டான்;
"பெற்றிலள் தவம் அந்தோ பெரும் நிலமகள்"என்றான்.(2119)
================================================================
விளக்கமாக ராமன் உரைத்ததைக் கேட்டான்!
சுழன்றிடும் ஊழ்வினையால் வந்ததீங்கு என்றான்!
உலகம் அரசனாய் உன்னைத்தான் பார்க்க
தவம்செய்ய வில்லையென்றான் பார்.













பரத்துவாசன் மீண்டும் வினவுதல்
---------------------------------------------------------
"துப்புஉறு துவர்வாயின் தூமொழி இவளோடும்
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது" என்னா
ஒப்புஅறும் மகன் உன்னை"உயர் வனம் உற ஏகு" என்று
எப்பரிசு உயிர் உய்ந்தான் என்துணை அவன்?" என்றான்.(2120)

சீதை உடனிருக்க ஆட்சி புரிவதற்குப்
பாதையைக் காட்டியே கேட்டான் “தசரதன்
காடேக உங்களுக்கு ஆணையிட்டே எவ்வாறு
கூடேந்தி வாழ்கின்றான் சொல்?”
-----------------------------------------------------------------------------------------------------------
தன்னுடன் தங்குமாறு முனிவன் வேண்டுதல்!
================================================
அந்த இடத்தின் அருமை பெருமைகளைச்
சங்கத் தமிழால் முனிவன் எடுத்துரைத்தான்!
தங்களுடன் தங்குமாறு ராமனிடம் கூறினான்!
மங்களம் தங்குமென்றான் பார்த்து. (2123)

இராமனின் மறுமொழி!
=======================
பரத்துவாசன் சொன்னதைக் கேட்டுவிட்டு ராமன்
அருகிலே உள்ள அயோத்திநகர் மக்கள்
பெருந்திரளாய் வந்திடுவார் என்றேதான் சொன்னான்!
அருந்தவத்தான் ஏற்றான் புரிந்து. (2126)
பரத்துவாசன் கருத்து
-------------------------------------
கூட்டமிங்கு வந்துவிட்டால் எங்களுக்கு இடையூறே!
நாட்டமுடன் சித்திர கூடத்தில் தங்குங்கள்!
வாட்டமின்றி நீங்களங்கே வாழலாம் என்றுரைத்தார்
மாதவத்தான் ஆசீர் வதித்து.(2127)

மாரீசன் வதைப்படலம்
=============================
இராவணனுக்கு மாரீசன் அறிவுரை
----------------------------------------------------------------
அடுத்தவர் நாட்டைக் கவர்தல், தினமும்
கொடுங்கோல் முறையில் வரிவசூ லித்தல்
அடுத்தவர் இல்லாளை இச்சித்தல் ,மூன்றும்
மறுத்தோர் உயர்ந்தவ ராம்.(3348)
====================================================
ராமன் மானைப் பின்தொடர்தல்!
=====================================
மூன்றடி கேட்டே அளந்தன கால்களன்று!
மானினைப் பற்றிவர அக்கால்கள் வேகமாய்த்
தேன்மகள் சீதையின் ஆசை நிறைவேற
நீண்டன ஆர்வமுடன் இன்று.

ஓடிய ராமனின் வேகத்தை யார்கணிக்க?
வாடியவள் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளவேண்டும்!
ஈடில்லா நாயகன் கால்கள் விரைந்திட
ஓடினான் மானைத் தொடர்ந்து.(3410)
==============================================

0 Comments:

Post a Comment

<< Home