சிறகுமாற்றம்!
சிறகுமாற்றம்!
====================================
முறுவல் இதழ்களில் எச்சில் வடிய
துறுதுறு வென்றே சுழன்றுத் திரிந்து
புதுசுவைத் தாய்ப்பால் அமுதம் அருந்தும்
பிறந்த குழந்தை அரும்பு.
தவழ்ந்து தவழ்ந்து விழுந்து விழுந்தே
அலறி அழுது தவிக்க வைத்து
மழலை பொழிந்து மனத்தைக் கவர்ந்து
வளரும் பருவம் அடுத்து.
சுவரைப் பிடித்து நடையைப் பழக
தவறிச் சரிந்ததும் அம்மாவைப் பார்த்து
பரபர வென்றே விரைந்து தழுவி
உவக்கும் பருவம் அடுத்து.
ஆடுவாள் ஓடுவாள் தேடியே சென்றதும்
மூடுவாள் கண்களை ! தாயோ ஒருகவளஞ்
சோறு தருவதற்குள் சோர்ந்து தடுமாறி
வாடுவாள் அங்கே தளர்ந்து.
துள்ளி விளையாடும் பள்ளிப் பருவத்தில்
அள்ளி அரவணைப்பாள் நாள்தோறும் பாடத்தை
சொல்லித் தருவதிலே ஆசானாய் அம்மாதான்
கல்விச் சுனையாவாள் காண்.
பள்ளிக்குச் சென்றேதான் தன்மகளின் முன்னேற்றம்
எவ்வாறு என்றே கணித்து ரசிப்பாள்!
புவியிலே தன்மகள் கல்லூரி சென்று
நிமிர்வதற்குத் தோள்கொடுப்பாள் இங்கு.
கல்லூரி வாழ்வை முடித்து வெளிவந்தே
அல்லாடி அன்றாடம் வேலைக்குச் சென்றிடும்
முல்லைக் கொடியை மலைத்தே ரசித்திருப்பாள்!
தொல்லை மறப்பாள் மகிழ்ந்து.
மணப்பருவம் வந்ததும் இல்லறத்தை ஏற்க
கணவனைத் தேடும் படலத்தில் வெற்றி
கனிந்ததும் தங்கள் கடமை நிறைவில்
தனித்திருப்பார் பெற்றோர் உவந்து.
பெற்றோர் சிறகுகளில் வாழ்ந்தவள் இன்றிங்கே
மற்றோர் சிறகுக்குள் வாழ்வதற்குச் செல்கின்றாள்!
பெற்றெடுத்த தங்கமகள் இன்பப் பிரிவினை
பெற்றோர் சுமத்தல் இயல்பு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home