Wednesday, October 12, 2016


மனக்குறள்

அகரவரிசை



பயன்படும் நல்ல  பழமரம்போல் வாழ்ந்தால்
உலகமே வாழ்த்தும் மகிழ்ந்து.

பா

பாட்டியும் தாத்தாவும் பேரனுக்கும் பேத்திக்கும்
ஆட்டிவைக்கும் பொம்மைதான் பார்.

பி

பிடிமானம் இல்லாத வாழ்க்கையில் ஏக்கம்
நொடியை யுகமாக்கும்! சொல்.

பீ

பீடுநடை போட்டேதான் வாழ்வதற்கு நல்லொழுக்கம்
பாடுபொருள் ஆகவேண்டும் இங்கு.

பு

புகழ்ந்தாரா ?ஏற்போம்! இகழ்ந்தாரா? ஏற்போம்!
அகத்தில் சமநிலை கொள்.

பூ

பூட்டுகள் வீட்டிற்குப் போடாதே! நாவிற்குப்
பூட்டுபோடு! நிம்மதி உண்டு.

பெ

பெருந்தன்மை கோழைத் தனமல்ல! தாயே!
பெரும்புகழின் வீரம் அது.

பே

பேச்சிங்கே பேச்சாக உள்ளமட்டும் ஒன்றுமில்லை!
பேச்சுக்குப் பேச்சு பகை.

பை

பைங்கொடி கொம்பொன்றைத் தேடியது! பாரிவள்ளல்
தன்தேரைத் தந்தான் உவந்து.

பொ

பொன்பொருள் கொடுத்தால்தான் பெண்ணெடுப்பேன்  என்றுரைக்கும்
சண்டித் தனந்தன்னைச் சாடு.

போ

போதைக் கடிமையாய் மாறிவிட்டால் இல்லறப்
பாதை இருள்மயந் தான்.

பௌ

பௌர்ணமி வெண்ணிலவைக் காட்டித்தான் தாயிங்கே
தெள்ளமுதை ஊட்டுவாள் சேய்க்கு.

0 Comments:

Post a Comment

<< Home