Monday, October 10, 2016

மனக்குறள்

அகரவரிசை



நடைமுறை வேறு! திரைமுறை வேறு!
நடைமுறைக்கு மாறு! திருந்து.

நா

நாடுகளைத் துண்டாடும் தீவிர வாதத்தைக்
கோடுபோட விட்டால் அழிவு.

நி

நிறைகளை ஏற்றுக் குறைகளைத் தள்ளி
நிறைவுடன் வாழ்தல் சிறப்பு.

நீ

நீலவானம் மேகம் நிலவு கடலலைகள்
பேரழகுச் சித்திரந்தான் பார்.

நு

நுங்கிரண்டைக் கம்பால் இணைத்துச் சிறுவர்கள்
வண்டி உருட்டுவார் இங்கு.

நூ

நூற்கடலின் கல்வி அமுதச்  சுவைமுன்னே
பாற்கடலின் தேனமுதம் வேம்பு.

நெ

நெற்றிப் பசலையோ ஏந்திழையாள் ஏக்கத்தை
எக்காளம் ஊதியது காண்.

நே

நேருக்கு நேரிங்கே பேசித் தெளிந்துவிட்டால்
தேருலாதான் ஒற்றுமைக்கு! செப்பு.

நை

நைல்நதிப் பேரழகி துன்பியல் வாழ்க்கையால்
நைல்நதியில் கண்ணீர்ப் பெருக்கு.

நொ

நொந்துபோகும் வண்ணம் புறணிபேசும் மாந்தர்கள்
பண்பிழந்து வாழும் பதர்.

நோ

நோயில் படுத்த படுக்கையாய் ஆகிவிட்டால்
பார்க்கத் தவிர்ப்பார் விளம்பு.

நௌ

( நௌவி--- மான்)

நௌவியைக் காட்டித்தான் சீதையோ வேண்டுமென்றாள்!
கௌவியது சோதனை! கூறு.

0 Comments:

Post a Comment

<< Home