Sunday, June 03, 2018

திருவள்ளுவர் கழகம்,தென்காசி

திருவள்ளுவர் கழகம்,தென்காசி


கவியரங்கம்! 01.06.2018 மதுரை பாபாராஜ்

மொழிவாழ்த்து!

தமிழே! தழைக்கும் தருவே! ஒளியே!
அமிழ்தே! அமிழ்தின் சுவையே! மலரே!
கமழும் மணமே! உயிரே! உணர்வே!
வணங்குகிறேன்! உன்னருள் தா.

வள்ளுவரை வணங்குவோம்!
----------------------------------------------------------
வாழ்வியல் நற்கருத்தை உள்ளடக்கி வள்ளுவர்
பாவினத்தில் ஏழேழு சொற்களில் அற்புதமாய்
ஆயிரத்து முந்நூற்று முப்பது  தேன்குறளால்
வேலிகளைத் தாண்டாமல் வாழவழி காட்டுகின்றார்!
வேலிக்குள் வீறுநடை போடு

அமைப்பிற்கு வாழ்த்து!

ஆண்டுகள் தொண்ணூறைத் தாண்டி திருக்குறள்
மாண்புகளைத் தென்காசி மாநகர் மன்றத்தார்
தீந்தமிழ்ப் பாக்குறளை ஆய்வுசெய்யும் தொண்டினைப்
பாங்குடன் மேற்கொண்டார் வாழ்த்து.

சிதம்பரனார் மற்றும் டிகேசி போன்ற
அடலேறுக் கூட்டம் முழங்கிய மேடை!
கணபதி ராமன் தலைவர்,செயல்
மனத்தார் சிவராமன் அய்யா செயலர்!
இனமானம் எங்கள் குறள்மானம் என்ற
மனநிறைவில் தென்றலின் தென்காசி கோயில்
மணங்கமழப் போற்றுகின்றார் பார்.


திருவள்ளுவர் கழகம்,தென்காசி
நிர்வாக அமைப்பு!
நிர்வாக அமைப்பில் மொத்தம் பதிநான்கு
நிர்வாகிகள் உள்ளனர்! தேன்குறளில் ஏழுசீர்கள்!
நிர்வகிக்க ஏழேழு சீர்கள் இருகுழுக்கள்!
தொய்வின்றித் தொண்டாற்றும் மாண்பில் மிளிர்கின்றார்.
வையகத்தில் வாழியவே நீடு.
இம்மன்றம் இன்னும் பலநூறு ஆண்டுகளைக்
கண்டு வளரட்டும் இங்கு.

அவையோர் வணக்கம்

காய்கறிகள் மற்றும் உணவும் வகைவகையாய்
நேர்த்தியாய் வைத்திருந்த போதிலும் உண்பதற்கு
ஆர்வமுடன் இங்கே விருந்தினர்கள் வந்தால்தான்
ஆக்கிவைத்த நல்விருந்தின் நற்பயன் போய்ச்சேரும்!
பாவகைகள் இங்கே படைத்தாலும் பாவிருந்தைக்
கேட்டு ரசிக்க அவையோர்கள் வேண்டுமிங்கே!
ஆக்கபூர்வ ஆர்வமுடன் வந்திருக்கும் உங்களைநான்
போற்றி வணங்குகிறேன் இங்கு.

எங்கள் வள்ளுவர் குழுத்தலைவர் சி ராஜேந்திரன்.

மூச்சுக்கு மூச்சிங்கே பேச்சுக்குப் பேச்சிங்கே
ஊற்றெடுத்தே ஓடிவரும் நற்குறள்கள் நாள்தோறும்!
பாற்கடலின் தீஞ்சுவையும் நண்பரின் தேன்குறள்
நூற்கடலின்  ஆற்றல் விளக்கச் சுவைமுன்னே
தோற்றுவிடும்  ஓடி ஒளிந்து.

உடன்பாடும் கவிஞர்கள்

கற்பனை வானில் சிறகடிக்கும் பாவலரா?
வெற்றரவப் பாவலரா? இல்லையில்லை! இங்கிருப்போர்
நற்றமிழ்த் தேன்குறள் பூங்காவில் சுற்றிவந்தே
வற்றாத தேனெடுத்து மன்றத்தில்  எல்லோரும்
பற்றுடன் மாந்தி மகிழவைக்கும் பாவலர்கள்!
சுற்றத்தை வாழ்த்தி வணங்குகிறேன் இங்கிருந்து!
அற்புதப் பாவலரை வாழ்த்து.


கவியரங்கத் தலைவர் வாழ்த்து

தலைவர் மெய்ஞானிபிரபு

எண்ணற்ற நற்புகழைத் தன்னகத்தே கொண்டவர்!
வண்டமிழில் பாவெழுதும் வித்தகர் மெய்ஞானி!
நண்பரை நற்றமிழால் வாழ்த்தி வணங்குகிறேன்!
என்பா தருகிறேன் உவந்து.


நடுவுநிலைமை

அஞ்சனக் கோலெடுத்துக் கண்ணில் மைதீட்ட
கண்ணுக்குள் உள்ள தலைவன்  மறைவானாம்!
தன்னவனைத் தக்கவைக்க மைதீட்ட மாட்டேன்நான்
என்றுரைத்த சேதியுண்டு இன்பத்துப் பாலில்தான்!
அம்மா மைவிழியாள் கூற்று.
அந்த மை இந்த மை
எந்த மை யானாலும்
வேண்டுகின்ற மையுமுண்டு!
 வேண்டாத மையுமுண்டு!


வள்ளுவத்தில்
நாற்பது  மைகளும்  வேண்டியவை!
நாலுமைகள் வேண்டாத மைகளாகும்!
நமக்கிங்கே மூன்றுமை வேண்டியவை
மூன்றுமை வேண்டாமை

எந்த மை என்றாலும்
என் தலைப்பு
நடுவுநிலைமை!
இல்லாமை ஆகிவிட்டால்
பொல்லாமையில் நாடிங்கே
தள்ளாமை கண்டுவிடும்.!

அதிகாரம் பன்னிரண்டு நடுவுநிலைமை!

கடிகார முள்களோ பன்னிரண்டில் ஒன்ற
புதியநாள் இங்கே தொடங்கும்--அதுபோல
வள்ளுவர் பன்னிரண்டில் தந்தார் நடு(வு)நிலைமை!
நல்விடியல் காண்பதற்குத் தான்..

குறள் 111
-------------------
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.

வேண்டியவர் வேண்டா தவரென்றே பார்க்காமல்
நீதிமுன்னே எல்லோரும் சமமென்ற எண்ணமுடன்
மேதினியில் நாளும் நடுநிலைமை போற்றவேண்டும்!
ஈடில்லா நல்லறம் அஃது.
குறள் 112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து.

நடுநிலைமைப் பண்புகளைப் போற்றுகின்றோர் செல்வம்
கடுகளவும் குன்றாது! மேலும் வளர்ந்தே
அடுத்த தலைமுறைக்கும் நன்மை பயக்கும்!
மிடுக்குடன் வாழலாம் நாம்

குறள் 113

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

நற்பயன்கள் வந்து குவியும் நடுநிலையைச்
சற்று விலக்கிவைத்தால் என்றே இழுத்தாலும்
.பற்றுடன் நாளும் நடுநிலையைப் பின்பற்றி
அப்பயனைத் தூற்றவேண்டும் சொல்.

குறள் 114

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.

நீதிநெறி போற்றியவர்! போற்றாமல் தூற்றியவர்!
மேதினியில் வாழ்ந்த நற்புகழும்--வாடவைக்கும்
மாப்பழியும் இவ்வுலகில் காட்டிவிடும் மன்பதையே!
போற்றும் நடுநிலையே பொன்.

குறள் 115

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

உயர்வதும் தாழ்வதும் வாழ்வின் இயற்கை!
சுழலும் இத்தகைய சுற்றில்--அலைபாய்தல்
இன்றி நடுநிலையைக் காப்பதே சான்றோர்க்குப்
பண்பின் அழகாம் இயம்பு.

குறள் 116

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.

நடுநிலையை விட்டு மயங்கியே நின்று
தடுமாற்றம் ஏற்கும் ஒருவன்---கெடுநிலை
தன்வாழ்வைச் சீரழிக்கப் போகின்ற கோலத்தை
அன்றே உணரவேண்டும் இங்கு.




குறள் 117

கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

நீதிக்குத் தாள்பணிந்து நித்தமிங்கே வாழ்பவனை
வேதனைக்கு வித்தூன்றும் வெங்கொடுமை---சோதனை
பின்னும் வறுமை பிழிந்தெடுத்தால் இவ்வுலகம்
எண்ணாது ஏழ்மைநிலை என்று.

குறள் 118

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி.

பொருள்களை வைத்ததும் உள்ள எடையைச்
சரியாகக் காட்டுகின்ற நல்ல ---தராசுபோல்
என்றும் நடுநிலையில் வாழ்வதே சான்றோர்க்கு
மங்காத பேரழகாம் செப்பு.

குறள் 119

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

நேர்மை தவறாத நெஞ்சுறுதி கொண்டிருக்கும்
நேர்வழி ஏந்தலிடம் என்றென்றும்--சார்பற்ற
நீதி நியாயம் மிளிரும்! நடுநிலைமை
மேதினியில் இஃதுதான் போற்று.


குறள் 120

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

பிறர்பொருளாய் இங்கே இருந்தாலும் பண்புச்
சிறப்புடன் தன்பொருளாய் எண்ணி -- முறையாக
நேர்மை மணங்கமழ வாணிகம் செய்வதே
பாரில் வணிகநெறி யாம்.


திருக்குறள் குழந்தைப்பாடல்
---------------------------------------------------
நடுவுநிலைமை -- 12
-----------------------------------------------
நடுநிலையே சிறந்த அறமாகும்
-------------------------------------------------------
நீதி என்றும் வழுவாமல்
நடுநிலை காப்பதே அறமாகும்!
இப்படி உள்ளவர் செல்வங்கள்
பரம்பரைக் கெல்லாம் உதவிடுமே!

நடுநிலை தவறும் பண்பாலே
மலைபோல் செல்வம் குவிந்தாலும்
அற்பம் என்றே ஒதுக்கிவிடு!

நடுநிலை போற்றிய பண்பாளன்
என்பதைப் புகழும், பழியுந்தான்
உலகில் காட்டும் அளவுகளாம்!

வறுமையும் வளமும் அணியல்ல!
நடுநிலை சான்றோர் அணியாகும்!
நடுநிலை விட்டே தவறிவிட்டால்
கெடுநிலை அவனை அழித்திடுமே!

நீதி மானின் வறுமையினை
பெருமை என்பார் சான்றோர்கள்!
சாயா துலாக்கோல் போலத்தான்
நடுநிலை கொண்டோர் சான்றோராம்!

ஒருதலைத் தீர்ப்பு சொல்லாத
நியாயப் பண்பே நடுநிலையாம்!

நுகர்வோர் நிலையில் தான்நின்று
வணிகம் செய்தல் வணிகருக்கு
சிறப்பைக் கொடுக்கும் ஒழுங்காகும்!

மதுரை பாபாராஜ்
01.06.2018

0 Comments:

Post a Comment

<< Home