Sunday, February 03, 2019

குழந்தைக்குக் குறளமுதம்

குறள் 68:

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

எனது தந்தை விவசாயி
எனது தாயும் துணைபுரிவார்

சொந்த மான நிலத்தினிலே
தினமும் உழைத்தார் கடுமையாக

என்னைப் படிக்க அரும்பாடு
பட்டார் எந்தன் தாய்தந்தை

பட்டப் படிப்போ நகரினிலே
கடனை வாங்கிப் படிக்கவைத்தார்

நன்றாய் மதிப்பெண் வாங்கித்தான்
வெற்றி பெற்றேன் தேர்வினிலே

முதல்வர் விருதைப் பெறுவதற்கு
நாங்கள் மூவரும் சென்றிருந்தோம்

படிப்பறி வில்லா பெற்றோரோ
படிக்க வைத்த காரணத்தால்

அறிவுத் திறனில் பெற்றோரை
விஞ்சிய மகனாய்த் திகழ்கின்றேன்!

முதல்வர் விருதைப் பெற்றுவிட்டேன்!
மாநில மக்கள் மெச்சுகின்றார்!

தாயும் தந்தையும் பெருமையுடன்
தலைநிமிர்ந் தேதான் நடக்கின்றார்!

ஊரில் வந்தே இறங்கியதும்
அடுத்த வீட்டு உறவினரோ

தனது மகனுக்கு அன்றுவந்த
மடலுட னேதான் ஓடிவந்தார்

மகனோ வெளியூர் போனதாலே
படித்தவ ரிடத்தில் விவரத்தைக்

கேட்டுத் தெரிய நான் வந்தேன்
சொல்லு தம்பி படித்ததம்பி!

அய்யா உங்கள் மகனுக்கு
வேலை கிடைச்ச செய்தியிது

என்றே சொன்னதும்  வந்தவரோ
இவனது பெற்றோர் மகிழ்ந்திடவே

நன்றி சொன்னார் பெற்றோர்க்கு
வாழ்த்தைச் சொன்னார் உளங்கனிய


வள்ளுவர் இந்தப் பொருளுடனே
அன்றே குறளை எழுதிவிட்டார்!

தாயும் தந்தையும் என்தெய்வம்
நன்றி யுடனே வணங்குகிறேன்!




0 Comments:

Post a Comment

<< Home