Monday, November 18, 2019

திருக்குறள் குழந்தைப் பாடல்
-----------------------------------------------------
நிலையாமை--34 
-------------------------------------------------------
நாம் செய்யும் அறங்கள் நிலையானது
செல்வங்கள் நிலையற்றவை
-------------------------------------------------------------------
நிலையே இல்லா வாழ்க்கையை
நிலையென் றெண்ணுதல் அறிவின்மை!

அரங்கில் கூடிக் கலைவதுபோல்
செல்வம் சேரும் நீங்கிவிடும்!

நிலையே இல்லாச் செல்வத்தைப்
பெற்றவர் நிலைத்த புகழ்நிலைக்கும்
அறச்செயல் தன்னைச் செய்யவேண்டும்!

ஒருநாள் என்னும் சிறுபொழுதோ
உடலின் உயிரைப் பிரித்தறுக்கும்
வாளைப் போன்ற ஆயுதந்தான்!

நாவை அடைத்து விக்கல்கள்
சாவைத் தருமுன் அறச்செயலை
நாளும் செய்தல் சிறப்பாகும்!

நேற்று இருந்தவர் இன்றில்லை
நிலையைக் கொண்ட வாழ்க்கையில்
நாளை இருப்போர் யாரிங்கே?

அறியா மக்கள் அறியாமை
கோட்டை கட்டும் மனதினிலே!

கூட்டில் முட்டை தனித்திருக்க
பறந்து சென்ற பறவையைப்போல்
உடலில் உயிரின் உறவாகும்!

தூங்கும் நிலையே சாவாகும்!
தூங்கி விழித்தல் பிறப்பாகும்!

உடலில் அலையும் உயிருக்கோ
இடமே இல்லையோ நிரந்தரமாய்!

மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home