Saturday, January 04, 2020

PEARLKIDS பொங்கலோ பொங்கல்!
--------------------------------------------
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
பொங்குக பொங்கலடா!

மங்கலம் எங்கும் தங்கட்டும் என்றே
வாழ்த்துச் சொல்வோமடா!

உழவரை நம்பி உலகம் வாழுது
உரக்கச் சொல்வோமடா!

உழவரை உயிரினம் வணங்கி மகிழும்
உண்மை உண்மையடா!

மழையும் உழவும் உலகைக் காக்கும்
உயிரைக் காக்குமடா!

இயற்கைத் தாயை வணங்கும் திருநாள்
பொங்கல் திருநாளே!

நம்மைக் காக்கும் மாடுக ளுக்கு
மாட்டுப்பொங்கலடா!

நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி சொல்வோமடா!

குழந்தைகள் நாமோ படிப்போம் படிப்போம்
படித்துத் தெளிவோமே!

படித்ததை நினைவில் நிறுத்தி நாமும்
அதன்படி வாழ்வோமே!

ஒழுக்கம் காத்து உயர்வோம் வாழ்வில்
நிமிர்ந்து வாழ்வோமே!

தாயும் தந்தையும் நமது தெய்வம்
வணங்குதல் கடமையடா!

நம்மைச் செதுக்கும் சிற்பி ஆசான்
வாழ்க்கை வழிகாட்டி

PEARL KIDS   பள்ளி சிறந்த பள்ளி
என்றே சொல்வோமே!

வள்ளுவன் கூறிய குறள்வழி வாழ்ந்து
பெருமை சேர்ப்போமே.






லட்சிய விளக்கினை ஏந்தும் நெஞ்சில்
 சலனக் காற்று கூடாது!

வெற்றியே இன்றித் தோல்வியே வரினும்
 விழியைக் கசக்கக் கூடாது!

உற்றார் பெற்றோர் நண்பர் என்றே
 உள்ளம் மயங்கக் கூடாது!

நெற்றிக் கண்ணாய்ச் செயல்பட வேண்டும்
 நெளிவு சுளிவு கூடாது!

நேர்மைப் பயணப் பாதை மீது
 நெருப்பைத் தூவும் நிலைவரலாம்!

கூரிய வேலாய்ப் பழிகள் துள்ளிக்
 கூட்டைத் தாக்கும் நிலைவரலாம்!

ஈரமே அற்ற ஈனத் தனங்கள்
 இன்னல் விதைக்கும் நிலைவரலாம்!

பாரமாய் இந்த வாழ்க்கை தோன்றும்
 பாதகம் சுரக்கும் நிலைவரலாம்!

பிறப்பவர் எல்லாம் இறப்பது உறுதி
 பிறகேன் கலங்கிட வேண்டுமடா?

நெறியைப் போற்று! நேர்வழி காட்டு!
 நெஞ்சில் நிம்மதி கூடுமடா!

வறுமையில் வாடி பாரதி போல
 வரலா றாகு போதுமடா!

முறையாய் வாழ்ந்தான் உலகில் என்றே
முடிவில் சொன்னால் போதுமடா!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home