9. விருந்தோம்பல்
குறளுக்குக் குறள்வடிவில் கருத்து
9. விருந்தோம்பல்
குறள் 81:
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டென்ளார் அய்யன்!
விருந்தினரைப் பேணி உதவும் பொருட்டே
பொருள்சேர்க்கும் இல்லறமாம் கூறு.
குறள் 82:
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்றென்றார் அய்யன்!
விருந்தினர் காத்திருக்க தான்மட்டும் உண்ணல்
அமிழ்தெனினும் நாம்தவிர்த்தல் பண்பு.
குறள் 83:
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்றென்றார் அய்யன்!
விருந்தினரைப் பேணுவதால் வாழ்க்கையைத் துன்பம்
நெருக்கி அழிப்பதில்லை சாற்று.
குறள் 84:
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்லென்றார் அய்யன்!
அகம்மகிழ நாளும் விருந்தோம்பல் செய்யும்
அகம்நாடித் தங்கும் வளம்.
குறள் 85:
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலமென்றார் வள்ளுவர்!
அன்பு விருந்தினர் உண்டபின்
உண்பவரின்
மண்விளையும் வித்திடாமல் தான்.
குறள் 86:
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கென்றார் வள்ளுவர்!
வந்தவர் செல்ல வருவோர்க்குக் காத்திருக்கும்
பண்பினை வாழ்த்தும் உலகு.
குறள் 87:
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயனென்றார் அய்யன்!
விருந்தினர்க் கேற்ற சிறப்பின் அளவே
விருந்தோம்பல் வேள்விப் பயன்.
குறள் 88:
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தாரென்றார் அய்யன்!
விருந்தோம்பல் வேள்விப் பயனைப் பெறாமல்
வளமிழந்தால் சோகத் துடிப்பு..
குறள் 89:
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டென்றார் அய்யன்!
விருந்தினரைப் போற்றாமல் செல்வம் படைத்தோர்
வறியோர் அறிவிலி யாம்.
குறள் 90:
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்தஎன்றார் வள்ளுவர்!
வாடும் முகர்ந்தால் அனிச்சம்! விருந்தளிப்போர்
வேறுபட்டால் வாடும் விருந்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home