Tuesday, December 01, 2020

8. அன்புடைமை



குறளுக்குக் குறள்வடிவில் கருத்து

8.அன்புடைமை

குறள் 71:

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புண்கணீர் பூசல் தருமென்றார் வள்ளுவர்!

அன்புகொண்டோர்  வாடும் துயர்கண்டால் 

கண்ணீரோ

தன்னால் பெருக்கெடுக்கும் சாற்று. 

குறள் 72:

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கென்றார் வள்ளுவர்!

அன்பற்றோர் எல்லாம் தனக்கென்பார்!

அன்புள்ளோர்  

இன்னுயிரும் ஈவார் பிறர்க்கு.

குறள் 73:

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போ டியைந்த தொடர்பென்றார் வள்ளுவர்!

இன்னுயிரும்  இவ்வுடலும்  சேர்ந்தே இருப்பதுபோல் 

அன்புதான் வாழவின் உயிர்.

குறள் 74:

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பென்றார் வள்ளுவர்!

அன்பே விருப்பத்தைத் தந்தே பழகவைக்கும்!

நட்பாக மாறவைக்கும் சாற்று.

குறள் 75:

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பென்றார் வள்ளுவர்!

இன்பமாக  முன்னணியில் வாழ்வதே

அன்புள்ளம்

கொண்டதன் பின்னணிதான் கூறு.

குறள் 76:

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணையென்றார் அய்யன்!

அறவுணர்வுக்  கன்பிங்கே வேண்டுதல்போல் வீரம்

நடைபோட அன்பே துணை.

குறள் 77:

என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறமுன்னால் வள்ளுவர்!

மண்புழுவை வாட்டுகின்ற வெய்யிலின் வெம்மைபோல்

அன்பிலாரை வாட்டும் அறம்.

குறள் 78:

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்றென்றார் வள்ளுவர்!

அன்பற்ற  வாழ்க்கையோ பட்டமரம்

பாலைவன

மண்ணில் தழைப்பதுபோ லாம்.

குறள் 79:

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப் பன்பி லவர்க்கென்றார் அய்யன்!

அகஉறுப்பாம் அன்பின்றி வாழ்வோர் உடலின்

புறஉறுப்பால்  என்னபயன் சொல்?

குறள் 80:

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பென்றார் வள்ளுவர்!

அன்பே உயிராகும்! அன்பற்ற மேனியோ

தோல்போர்வை போட்ட உடம்பு.

மதுரை பாபாராஜ்


























0 Comments:

Post a Comment

<< Home