Monday, February 01, 2021

121 நினைந்தவர் புலம்பல்


குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

121 நினைந்தவர் புலம்பல்

குறள் 1201:

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது.


நினைத்ததும் இன்பம் தருதலால் காதல்

மதுவினும் என்றும் இனிது.

குறள் 1202:

எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்

நினைப்ப வருவதொன் றில்.


பிரிவில் நினைத்தால் பிரிவுத் துயரம்

தெரிவதில்லை! எப்படிப் பார்த்தாலும் காதல்

அளிப்பதோ இன்பமே! சாற்று.

குறள் 1203:

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்

சினைப்பது போன்று கெடும்.


தும்மல் வருவதுபோல் நிற்கிறதே! அன்பரென்னை

எண்ணி மறக்கின்றா ரோ?

குறள் 1204:

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்

தோஒ உளரே அவர்.


என்னெஞ்சில் அன்பர் இருப்பதுபோல் அன்பரின்

நெஞ்சில் இருப்பேனா நான்?

குறள் 1205:

தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்

எம்நெஞ்சத் தோவா வரல்.


அன்பரின் நெஞ்சில் ஒதுக்குகின்றார்! என்னெஞ்சில்

வந்துபுக நாணாரோ? சொல்.

குறள் 1206:

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்

உற்றநாள் உள்ள உளேன்.


அன்பருடன்  வாழ்ந்த நினைவில்  உயிர்வாழ்வேன்!

என்வாழ்க்கை வேறெதனால்? சொல்.

குறள் 1207:

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

உள்ளினும் உள்ளம் சுடும்.


அன்பரின் நாளை மறவாமல் வாழ்ந்தாலே

நெஞ்சம் சுடுகிறதே, நானோ மறந்துவிட்டால்

என்னதான் ஆவேனோ? சொல்.

குறள் 1208:

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ

காதலர் செய்யும் சிறப்பு.


அன்பரைநான் எப்படி எண்ணினாலும் ஏசமாட்டார்!

என்னவரின் காதல் சிறப்பு.

குறள் 1209:

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்

அளியின்மை ஆற்ற நினைந்து.


நம்முயிர் ஒன்றெனச் சொல்லி பிரிந்துசென்றார்!

எண்ணி மருகுதே உயிர்.

குறள் 1210:


விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்

படாஅதி வாழி மதி.


அன்பர் பிரிந்துசென்றார்! நானவரைக் காணுமட்டும்

வெண்மதியே! என்துணையாய் வா.


மதுரை பாபாராஜ்






















0 Comments:

Post a Comment

<< Home