Tuesday, February 02, 2021

122 கனவுநிலை உரைத்தல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

122 கனவுநிலை உரைத்தல்

குறள் 1211:

காதலர் தூதொடு வந்த கனவினுக்

கியாதுசெய் வேன்கொல் விருந்து.


என்துன்பம்  போக்கவந்த தூதாம் கனவிற்குக் 

கைம்மாறு என்செய்வேன் நான்?

குறள் 1212:

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்

குயலுண்மை சாற்றுவேன் மன்.


என்கண்கள் தூங்கினால் அக்கனவில் அன்பரிடம்

இன்னுமுயிர் உள்ளதென்பேன் நான்.

குறள் 1213:

நனவினான் நல்கா தவரைக் கனவினால்

காண்டலின் உண்டென் உயிர்.


நேரில் வராமல் கனவிலன்பர் காண்பதால்

நேரிழை வாழ்கிறேன் சொல்.

குறள் 1214:

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்

நல்காரை நாடித் தரற்கு.


நேரில் வராதவரை இக்கனவு காட்டுவதால்

சேயிழைக் கின்பமுண்டு செப்பு.

குறள் 1215:

நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்

கண்ட பொழுதே இனிது.


அன்பரை நேரிலே பார்த்தபோதும் என்கனவில்

கண்டபோதும் இன்பந்தான் செப்பு.

குறள் 1216:

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்

காதலர் நீங்கலர் மன்.


நினைவு கலைக்கா திருந்திருந்தால் அன்பர்

கனவைவிட்டு நீங்கமாட்டார் சொல்.

குறள் 1217:

நனவினான் நல்காக் கொடியார் கனவினான்

என்னெம்மைப் பீழிப் பது.


நேரிலே வந்தெனக்கு அன்புகாட்ட மாட்டாராம்!

சேயிழையைத் துன்புறுத்த ஏனோ கனவிலே

பாய்ந்து வருவாராம் ஏன்?

குறள் 1218:

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்

நெஞ்சத்தார் ஆவர் விரைந்து.


என்னெஞ்சில் உள்ளவர் தூங்கிடும் நேரத்தில்

என்தோளின் மேலே வருகின்றார்! கண்விழித்தால்

நெஞ்சுக்குள் செல்வார் விரைந்து.

குறள் 1219:

நனவினான் நல்காரை நோவர் கனவினான்

காதலர்க் காணா தவர்.


கனவிலே அன்பரைக் காணாதோர் நேரில்

வரவில்லை என்றேசு வார்.

குறள் 1220:

நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்

காணார்கொல் இவ்வூ ரவர்.


பிரிந்துவிட்டார் என்றேசும் ஊரார்கள் அன்பர்

கனவில் வருவதறி யார்?


























0 Comments:

Post a Comment

<< Home